சுங்கைப் பூலோ பகுதி அருகே சாலையில் ஊர்ந்து சென்ற முதலையைத் தேசியப் பூங்கா கழக அதிகாரிகள் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
செவ்வாய்க்கிழமை (மார்ச் 18) பிற்பகல் நியோ டியு கிரிசென்ட் சாலையில் செல்லும்போது முதலை ஊர்ந்து செல்வதைக் கண்டதாக கூ என்ற ஆடவர் படத்துடன் சமூக ஊடகத்தில் பதிவிட்டார்.
அதைத்தொடர்ந்து அதிகாரிகள் தேடுதல் வேட்டையில் இறங்கினர்.
இந்நிலையில்,ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தியாளர் முதலை குறித்து தேசியப் பூங்கா கழகத்திடம் தகவல் கேட்டார்.
முதலை ஊர்ந்து சென்ற இடம் அருகே அதிகாரிகள் சோதனை நடத்தியதாகவும் முதலை அருகில் இருந்த பண்ணையிலிருந்து வந்ததா என்பதையும் அதிகாரிகள் ஆராய்ந்து வருவதாகத் தேசியப் பூங்கா கழகத் தெரிவித்தது.
யாரேனும் முதலையைப் பார்த்தால் உடனடியாகத் தகவல் கொடுக்குமாறும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.