சக பெண் ஊழியரை மானபங்கம் செய்த அதிகாரிக்குச் சிறை

1 mins read
540d5fe2-4e6a-45b5-82b9-44c2bdcd3321
வழக்கு விசாரணையை அடுத்து, மூன்று குற்றச்சாட்டுகளின்கீழ் சம்பந்தப்பட்ட ஆடவர் குற்றவாளி என மாவட்ட நீதிபதி எடி தாம் தீர்ப்பளித்தார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தமது மேற்பார்வையின்கீழ் பணிபுரிந்த பெண்ணை மானபங்கம் செய்த குற்றத்துக்காக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை அதிகாரி ஒருவருக்கு புதன்கிழமை (ஆகஸ்ட் 6) 15 மாதச் சிறை விதிக்கப்பட்டது.

வழக்கு விசாரணையை அடுத்து, மூன்று குற்றச்சாட்டுகளின்கீழ் அந்த ஆடவர் குற்றவாளி என மாவட்ட நீதிபதி எடி தாம் தீர்ப்பளித்தார்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளத்தைக் காக்க அவர் தொடர்பான விவரங்களையும் குற்றங்கள் நிகழ்ந்த இடங்கள் தொடர்பான விவரங்களையும் வெளியிடக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தண்டனை விதிக்கப்பட்ட ஆடவர் தொடர்பான விவரங்கள் வெளியிடப்பட்டால் பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளம் தெரியவரும் என்பதற்காக அந்த ஆடவர் தொடர்பான விவரங்களை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் வெளியிடவில்லை.

2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அப்பெண் ஒருவருக்கு சிகிச்சை அளித்துக்கொண்டிருந்தபோதும் அவரை அந்த ஆடவர் மானபங்கம் செய்தார்.

2023ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து அந்த ஆடவர் பாதி சம்பளத்துடன் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆலோசனைச் சேவையை சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை வழங்கியதாகவும் அதன் செய்தித்தொடர்பாளர் கூறினார்.

குற்றம் புரிந்த ஆடவர் அப்பெண்ணின் மேற்பார்வையாளராகச் செயல்பட்டு வந்ததாக அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர் சந்திரா ஐயாசாமி தெரிவித்தார்.

சக ஊழியர்கள் என்கிற முறையில் இருவரும் நெருக்கமாக இருந்ததாகவும் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான விவரங்களை ஒருவர் மற்றொருவரிடம் பகிர்ந்துகொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட ஆடவர் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு $20,000 பிணை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்