ஜோகூர் பாலத்தை நடந்தே கடப்பது குறித்து அதிகாரிகள் விளக்கம்

ஜோகூர் பாலத்தை நடந்தே கடப்பது குறித்து அதிகாரிகள் விளக்கம்

2 mins read
9bca952c-bf6d-4024-b3fb-730b5b096314
மலேசிய அதிகாரிகள் தங்களது சோதனைச் சாவடிக்கு அருகே ‘நடந்து செல்ல அனுமதி இல்லை’ என்ற புதிய அறிவிப்புப் பலகையை வைத்ததை அடுத்து, ஜோகூர் பாலத்தை நடந்தே கடப்பது சட்டபூர்வமானதா என்பது குறித்த விவாதங்கள் அண்மையில் இணையத்தில் சூடுபிடித்துள்ளன. - படம்: சாவ்பாவ்

உட்லண்ட்ஸ்-ஜோகூர் பாலத்தில் முழு நீளத்திலும் நடக்க தடை விதிக்கப்பட்டுள்ளது என்பதை பாதசாரிகளுக்கு நினைவூட்டும் முயற்சிகளை முடுக்கிவிட்டுள்ளதாக மலேசிய அதிகாரிகள் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் தெரிவித்தனர்.

இருப்பினும், சிங்கப்பூர் பகுதியில் உள்ள பாலத்தில் நடந்து செல்லத் தடை செய்யும் குறிப்பிட்ட விதிகள் எதுவும் இல்லை என சிங்கப்பூர் அதிகாரிகள் உறுதியாகக் கூறுகின்றனர்.

மலேசிய அதிகாரிகள் தங்களது சோதனைச் சாவடிக்கு அருகே ‘நடந்து செல்ல அனுமதி இல்லை’ என்ற புதிய அறிவிப்புப் பலகை வைத்ததை அடுத்து, ஜோகூர் பாலத்தை நடந்தே கடப்பது சட்டபூர்வமானதா என்பது குறித்த விவாதங்கள் அண்மையில் இணையத்தில் சூடுபிடித்துள்ளன.

நெரிசல் மிகுந்த நேரங்களில் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க, வேறு வழியில்லாத நிலை ஏற்படும்போது அன்றாடம் சிலர் ஜோகூர் பாலத்தை நடந்தே கடக்கின்றனர்.

இந்நிலையில், இந்த அறிவிப்புப் பலகை இப்போது வைக்கப்பட்டதற்கான நேரம் குறித்து இணையவாசிகள் சிலர் கேள்வி எழுப்பினர்.

அண்மைய மாதங்களில் ஜோகூர் பாலத்தில் பாதசாரிகள் தொடர்பான விபத்துகளுக்குப் பிறகே இந்த அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

பாதுகாப்பு காரணங்களுக்காக, 2008ஆம் ஆண்டு டிசம்பர் ஜோகூர் சுங்கத்துறை, குடிநுழைவு, தனிமைப்படுத்தல் வளாகம் திறக்கப்பட்ட பின்னர், ஜோகூர் பாலத்தை நடந்து கடப்பதற்கு மலேசிய அதிகாரிகள் தடை விதித்ததாக 2009ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது.

இதற்கிடையே, 2026ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15ஆம் தேதியன்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழின் கேள்விகளுக்குப் பதிலளித்த மலேசிய நெடுஞ்சாலை ஆணையம், ஜோகூர் பாலத்தில் எந்தத் திசையிலும் நடப்பதற்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளதை மீண்டும் உறுதிப்படுத்தியது.

இந்த நடவடிக்கை பாதுகாப்புக் காரணங்களுக்காகவும் அத்துமீறி நுழைவதைத் தடுப்பதற்காகவும் எடுக்கப்பட்டுள்ளது என அது மேலும் கூறியது.

மலேசியச் சட்டத்தின்படி, போக்குவரத்துக் குறியீடுகளை மீறுபவர்களுக்கு 300 ரிங்கிட் (S$100) முதல் 2,000 ரிங்கிட் வரை அபராதம் விதிக்கப்படலாம்.

“ஜோகூர் பாலத்தில் சிங்கப்பூர் பகுதியில் பாதசாரிகள் நடந்து செல்வது தொடர்பான நடைமுறையில் தற்போது எந்த மாற்றமும் இல்லை” என்று சிங்கப்பூரின் குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையத்தின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.

ஜோகூர் பாலத்தை நடந்தே கடக்க பாதசாரிகளுக்கு வசதிகள் செய்து தரப்படவில்லை என்றபோதிலும் சிங்கப்பூர் அதிகாரிகளால் புதிதாக எந்தத் தடையும் அறிமுகப்படுத்தப்படவில்லை என்பதே இதன் பொருள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்