கம்போடிய வர்த்தகருக்குச் சொந்தமான சிங்கப்பூர்ச் சொத்துகளைக் கைப்பற்ற அதிகாரிகள் நடவடிக்கை

2 mins read
5aa5b1a7-3830-48fb-9d53-c661b7be2baa
சென் ‌ஷி - படம்: பிரின்ஸ் ஹோல்டிங் குழுமம்

சிங்கப்பூரில் கம்போடிய வர்த்தகர் சென் ‌ஷிக்கும் அவரின் பிரின்ஸ் குழுமத்துக்கும் உள்ள மேலும் அதிகமான சொத்துகளை அதிகாரிகள் பறிமுதல் செய்யக்கூடும் என்று நம்பப்படுகிறது. நீதிமன்ற விசாரணையில் அந்தச் சொத்துகள் குறித்த விவரங்கள் வெளிச்சத்திற்கு வந்தன.

$3.7 மில்லியனுக்கும் மேல் மதிப்புடைய காசோலைகள், $257,000க்கும் மேல் பெறுமானமுள்ள பங்குப் பத்திரங்கள், 362,200 மதிப்புள்ள பாதுகாப்பு வைப்புத்தொகை முதலியவற்றைக் கைப்பற்ற வர்த்தகக் குற்றப் புலனாய்வுப் பிரிவு முயல்வதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ஊடகத்திற்குத் தெரியவந்துள்ளது.

சிங்கப்பூரைத் தளமாகக் கொண்ட டிடபிள்யூ கேப்பிட்டல் எனும் சென்னின் குடும்ப அலுவலகத்தின் முன்னாள் ஊழியர் ஒருவர், அலுவலகத்திலிருந்து நிதியை மீட்க அனுமதிக்குமாறு சென்ற மாதம் (நவம்பர் 2025) 18ஆம் தேதி விண்ணப்பித்திருந்தார். அதன் தொடர்பான வாக்குமூல ஆவணங்களை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கண்டது.

நிறுவனத்தில் எஞ்சியிருக்கும் இயக்குநர் கேரன் சென் ஸியுலிங்கின் சார்பில் முன்னாள் மனிதவள மேலாளர் நீதிமன்றத்தில் அந்த விண்ணப்பத்தை முன்வைத்திருந்தார்.

டிடபிள்யூ கேப்பிட்டல், உயர்-ரகக் கிடங்குச் சேமிப்பு நிறுவனமான கேப்பிட்டல் ஸோன் வேர்ஹவுசிங், கார் நிதி நிறுவனமான ஸ்கைலைன் இன்வெஸ்ட்மென்ட் மேனேஜ்மென்ட், தகவல் தொழில்நுட்ப ஆலோசனை நிறுவனமான சிட்டிலிங்க் சொல்யூ‌ஷன்ஸ் ஆகியவற்றிலிருந்து நிதியை மீட்பதற்கு அவர் விண்ணப்பித்ததாகத் தெரிகிறது.

நான்கு நிறுவனங்களுமே ஃபிஜியில் பிறந்தவரான சென்னுடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளன. நேரடியாகவோ பிரிட்டி‌‌ஷ் வெர்ஜின் தீவுகளில் பதிவுசெய்யப்பட்ட குளோபல் டிர‌ஷர் டெவலப்மென்ட் மூலமோ அவற்றுக்கும் அவருக்கும் தொடர்பிருப்பதாகக் கூறப்படுகிறது.

முன்னாள் மேலாளர் கோரிய தொகையில், வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்ட பின்னர் செலவிடப்பட்ட $332,000க்கும் அதிகமான சம்பளத் தொகை, செலுத்தப்பட வேண்டிய $459,000 நிறுவன வரி, எதிர்காலச் செலவுகளுக்காக மாதந்தோறும் கிட்டத்தட்ட $102,000 முதலியவை அடங்கும்.

நீதிமன்ற ஆவணங்களின்படி, வர்த்தகக் குற்றப் புலனாய்வுப் பிரிவு, நிதியைக் கொடுக்க அனுமதிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததாகத் தெரிகிறது.

அக்டோபர் 14ஆம் தேதி, அமெரிக்காவும் பிரிட்டனும் சென் மீதும் பிரின்ஸ் குழுமத்தின் மீதும் அவர்களுடன் தொடர்புடையோர் மீதும் பல தடைகளை விதித்தன. கள்ளப் பணத்தை நல்ல பணமாக்க முயன்றது, மின்கட்டமைப்பு மூலம் எல்லை கடந்து குற்றம் புரிந்தது, கம்போடியாவில் கட்டாயப்படுத்திப் பலரை மோசடி நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அவர்கள் மீது சுமத்தப்பட்டன.

சிங்கப்பூர்க் காவல்துறை அக்டோபர் 30ஆம் தேதி மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகளில் $150 மில்லியனுக்கும் மேல் மதிப்புள்ள ஆறு சொத்துகள், உல்லாசப் படகு, 11 வாகனங்கள் முதலியவை கைப்பற்றப்பட்டன.

குறிப்புச் சொற்கள்