பாசிர் பாஞ்சாங் முனையத்தில் நிறுத்திவைக்கப்பட்ட கப்பல் மீது தூர்வார் படகு ஒன்று மோதியதற்கு, ‘பொறி மற்றும் திசைதிருப்பியின் கட்டுப்பாட்டை அது திடீரென இழந்ததே’ காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எண்ணெய்க் கசிவைத் துப்புரவு செய்யும் பணிகளை மேற்கொண்டுள்ள சிங்கப்பூர்க் கடல்துறை, துறைமுக ஆணையம் (எம்பிஏ), தேசிய சுற்றுப்புற வாரியம், தேசிய பூங்காக் கழகம், செந்தோசா மேம்பாட்டு நிறுவனம் ஆகியவை ஜூன் 16ஆம் தேதி வெளியிட்ட கூட்டறிக்கையில் இதனைக் குறிப்பிட்டன.
நெதர்லாந்துக் கொடி தாங்கிய ‘வோக்ஸ் மாக்ஸிமா’ படகு, ஜூன் 14ஆம் தேதி சிங்கப்பூர்க் கொடி தாங்கிய ‘பங்கர்’ கப்பலான ‘மரின் ஆனர்’ மீது மோதியதில் எண்ணெய்க் கசிவு ஏற்பட்டது.
எண்ணெய்க் கசிவைத் சிதறடிக்கும் திரவத்தைத் தெளிக்க எம்பிஏ அதன் சுற்றுக்காவல் படகை அனுப்பியுள்ளதாகக் கூறப்பட்டது.
கசிவின் பாதிப்பைக் குறைப்பதற்கு நீர் மேல் மிதக்கும் எண்ணெய்யை அகற்றும் கருவியும் பயன்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
அலை நீரோட்டத்தால் செந்தோசா, ஈஸ்ட் கோஸ்ட் பூங்கா, லெப்ரடோர் வனப்பகுதி, தென் தீவுகள், மரினா சவுத் படகுத்துறை ஆகிய பகுதிகளை எண்ணெய்க் கசிவு சென்றடைந்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.
எம்பிஏ இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறது. விசாரணையில் கப்பல் தலைவரும் குழுவினரும் உதவிவருவதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே பொதுமக்கள் செந்தோசாவின் கடற்கரைகளுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டாலும் கடல்சார் நடவடிக்கைகளும் நீச்சல் அடித்தலும் தஞ்சோங், பலவான், சிலோசோ கடற்கரைகளில் அனுமதிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.