ஹெம்ஷாயர் சாலையில் உள்ள முன்னாள் கன்டாங் கெர்பாவ் மருத்துவமனையின் மூன்று புளோக்குகள் சிங்கப்பூரின் 76வது தேசிய நினைவுச்சின்னமாக அரசிதழில் இணைக்கப்படவிருக்கின்றன.
தேசிய மரபுடைமைக் கழகம், வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 5) முன்னாள் மருத்துவமனையின் வளாகத்தை Roots.gov.sg என்ற அதன் மரபுடைமை வள இணையத்தளத்தில் தேசிய நினைவுச்சின்னமாக முன்மொழிந்தது.
தேசிய நினைவுச்சின்னங்களாக ஏற்கெனவே வகைப்படுத்தப்பட்ட இடங்களுக்குக் கொடுக்கப்படும் அதே பழமைப் பாதுகாப்பு, முன்மொழியப்பட்ட நினைவுச்சின்னங்களுக்கும் வழங்கப்படும். எனவே அவற்றில் மாற்றம் செய்வோர் தண்டனையை எதிர்கொள்வர்.
தேசிய நினைவுச்சின்னமாக முன்மொழியப்பட்ட மூன்று புளோக்குகள் 1930களிலும் 1950களிலும் கட்டப்பட்டவை. முன்னாள் மருத்துவமனையைப் பிரதிபலிக்கும் அவை, சிங்கப்பூரில் பேறுகாலப் பராமரிப்பு எப்படி மேம்பட்டது என்பதை எடுத்துரைக்கிறது என்று தேசிய மரபுடைமைக் கழகம் குறிப்பிட்டது.
அரசாங்கத்துக்குச் சொந்தமான அந்த மூன்று புளோக்குகளை நிலப் போக்குவரத்து ஆணையம் குத்தகைக்கு எடுத்து தனது அலுவலகமாகப் பயன்படுத்துகிறது.
பழைய கன்டாங் கெர்பாவ் மருத்துவமனை 1997ஆம் ஆண்டு 100 புக்கிட் தீமா சாலையில் உள்ள வளாகத்துக்கு மாறியபோது கேகே மகளிர், சிறார் மருத்துவமனை என்று அழைக்கப்பட்டது.
பேறுகாலம் தொடர்பான சிக்கல்கள் கொண்ட நோயாளிகளுக்கு 1868ல் சிகிச்சை அளித்த கென்டாங் கர்பாவ் மருத்துவமனை 1924, அக்டோபர் 1ஆம் தேதியிலிருந்து இலவச மகப்பேறு மருத்துவமனையாக அதிகாரபூர்வமாக மாறியது. அன்றிலிருந்து மகப்பேறு சுகாதாரப் பராமரிப்பில் மருத்துவமனையின் நிபுணத்துவம் தொடங்கியது என்று தேசிய மரபுடைமைக் கழகம் குறிப்பிட்டது.
மருத்துவமனை வளாகத்தில் பல்வேறு மருத்துவச் சாதனைகளும் படைக்கப்பட்டன.
தொடர்புடைய செய்திகள்
உதாரணமாக 1942ல் மருத்துவமனையின் மகப்பேறியல், மகளிர் மருத்துவத் துறையின் தலைவராக டாக்டர் பெஞ்சமின் ஷியர்ஸ் பொறுப்பேற்றார். அவர் பிறகு, சிங்கப்பூரின் இரண்டாவது அதிபரானார்.
சிசுக்களும் தாய்மாரும் மரணமைடையும் விகிதத்தைக் கணிசமாகக் குறைக்க மருத்துவமனையின் முன்னோடி மருத்துவர்களும் தாதியரும் முக்கிய பங்காற்றியதாக மரபுடைமைக் கழகம் குறிப்பிட்டது.
புதிய நினைவுச்சின்னமாக வகைப்படுத்தப்படவிருக்கும் மூன்று கட்டடங்களில் புளோக் 2 ஆக பழைமையானது. அது 1933ஆம் ஆண்டு கட்டப்பட்டது. புளோக் 3, 1940ல் கட்டப்பட்டது. புளோக் 1, 1953க்கும் 1955க்கும் இடையே கட்டப்பட்டது.