காலாங்கின் நார்த் பிரிட்ஜ் ரோட்டில் அமைந்துள்ள குடியிருப்பு கட்டடத்தில் 70 வயது ஆடவர் மாண்ட நிலையில் காணப்பட்டார்.
ஏப்ரல் 30ஆம் தேதி அண்டை வீட்டுக்காரர் ஒருவர், முதியவர் வீட்டிலிருந்து துர்நாற்றம் வந்ததையடுத்து காவல்துறை அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தார்.
அதைத் தொடர்ந்து வீட்டில் சோதனை நடத்திய அதிகாரிகள் முதியவரின் சடலத்தைக் கண்டனர்.
மாண்ட ஆடவர் சக்கர நாற்காலி உதவியுடன் வாழ்ந்துவந்ததாகவும் அவர் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக அந்த வீட்டில் தனியாக வாழ்ந்துவந்ததாகவும் அண்டை வீட்டுக்காரர் ஒருவர் ஷின் மின் செய்தியாளரிடம் தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்குச் சென்றபோது அங்குச் சில காவல்துறை அதிகாரிகள் சோதனையிட்டு வந்ததாகச் செய்தியாளர் குறிப்பிட்டார்.
மாண்ட முதியவரைக் கடந்த வாரம் தாம் கண்டதாக அண்டை வீட்டுக்காரர் ஒருவர் கூறினார். இருப்பினும் கடந்த சில நாள்களாக அவரைக் காண முடியவில்லை என்று அவர் தெரிவித்தார்.
மரண விசாரணை அதிகாரி சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்திய பிறகு முதியவரின் சடலம் இரவு 11 மணிவாக்கில் குடியிருப்பு கட்டடத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டது.