தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

முதிய, குறைந்த வருமான ஊழியர்களுக்கு கூடுதல் உதவி தேவை: நாடாளுமன்றத்தில் கோரிக்கை

3 mins read
02f9d540-d14d-4f26-917e-e2bf0b3a9580
நாடாளுமன்றத்தில் முதல் இரண்டு நாள்களாக நடைபெற்ற வரவுசெலவுத் திட்ட விவாதத்தின்போது ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என இருதரப்பு உறுப்பினர்களும் இன்னமும் கூடுதலாக உதவி தேவைப்படும் ஊழியர்கள் பற்றிக் குறிப்பிட்டனர். - கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இவ்வாண்டின் வரவுசெலவுத் திட்டமானது ஊழியர்களும் நிறுவனங்களும் பயிற்சி, ஆட்சேர்ப்பு தொடர்பில் சவால்களை எதிர்கொள்ள ஆதரவு வழங்குகிறது.

இருந்தாலும், நாடாளுமன்றத்தில் முதல் இரண்டு நாள்களாக நடைபெற்ற வரவுசெலவுத் திட்ட விவாதத்தின்போது ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என இருதரப்பு உறுப்பினர்களும் இன்னமும் கூடுதலாக உதவி தேவைப்படும் ஊழியர்கள் பற்றி எடுத்துரைத்தனர்.

தொழிற்சங்க நாடாளுமன்ற உறுப்பினரான முகம்மது ஃபாமி அலிமான் (மரின் பரேட் குழுத் தொகுதி) வியாழக்கிழமை வரவுசெலவுத் திட்டத்தில் குறைந்த வருமான ஊழியர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டதை ஒப்புக்கொண்டார்.

அதே சமயத்தில், வேலைநலன் துணை வருமானத் திட்டத்தின்குறைந்தபட்ச வழங்குதொகை மற்றும் வயதுவரம்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

அத்திட்டம் குறைந்த வருமான ஊழியர்களின் ஓய்வுக்காலச் சேமிப்பிற்கு உதவ சம்பளத்திற்கு மேல் வழங்கப்படுகிறது. தற்போது 60 வயதும் அதற்கு மேற்பட்ட வயதும் உடையவர்களுக்கு இத்தொகை வழங்கப்படுகிறது. அந்த வழங்குதொகை, வயதுக்கு ஏற்ப அதிகரிக்கிறது. ஆனால், தற்போது அதிகபட்ச வயதுவரம்பு 60ஆக உள்ளது. இருப்பினும், பல ஊழியர்கள் அவ்வயதைக் கடந்த பின்னரும் நன்றாக வேலை செய்கிறார்கள்.

இதனைக் கருத்தில்கொண்டு, ஓய்வு வயதுக்கு ஏற்ப 60 வயதைத் தாண்டிய கூடுதல் வயதுக்கு படிப்படியாக அதிக வழங்குதொகை அறிமுகப்படுத்தப்படலாம் என்று திரு ஃபாமி யோசனை தெரிவித்தார்.

ரொக்கம், மத்திய சேம நிதி பங்களிப்பாக குறைந்தபட்சத் தொகையாக தற்போது தலா 10 வெள்ளி வழங்கப்படுகிறது. அதிகரித்துவரும் வாழ்க்கைச் செலவினங்களால் அத்தொகையும் உயர்த்தப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

முதல் நாள் (பிப்ரவரி 26) விவாதத்தின்போது மற்றொரு உறுப்பினரான கான் தியாம் போவும் (அம் மோ கியோ குழுத் தொகுதி) இதே போன்ற யோசனைகளை முன்வைத்திருந்தார்.

குறைந்த வருமானம் கொண்ட ஊழியர்களின் சிரமங்களை எடுத்துரைப்பதாக அவரது பேச்சு அமைந்திருந்தது.

திரு முகம்மது ஃபாமி தனது உரையில் கட்டட மேம்பாட்டாளர்களையும் முதலாளிகளையும் குறைந்த வருமான ஊழியர்களுக்கு அதிக ஓய்வு இடங்களை வழங்குமாறு கேட்டுக் கொண்டார்.

இதற்கிடையே, மூன்றாம் தரப்பு முகவர்கள் மூலம் பணியமர்த்தப்பட்ட தன்னுரிமை ஊழியர்கள் (Freelancers), ஒப்பந்த ஊழியர்கள் மிகவும் தீவிரமான ஆதரவு தேவைப்படும் பாதிக்கப்படக்கூடிய இரண்டு பிரிவுகளில் ஒன்றாக இருப்பதாக நியமன நாடாளுமன்ற உறுப்பினர் ஜேன் சீ கூறினார்.

மற்றொரு பிரிவினர் ஆட்குறைப்பு காரணமாக பாதிக்கப்படும் பிரிவினர் என்றார் அவர்.

தன்னுரிமை ஊழியர்கள், சுயதொழில் செய்பவர்களுக்கு என்டியுசி பிரிவின் இயக்குநரான திருவாட்டி சீ, வேலை இழந்தவர்கள் மீண்டு வருவதற்கு உதவும் ஸ்கில்ஸ்ஃபியூச்சர் வேலை தேடுவோருக்கான ஆதரவுத் திட்டம் போன்றவை அதிக குடும்ப உறுப்பினர்களைக் கொண்டவர்களுக்கு ஆதரவளிக்க வசதியாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

பைனியர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் என்டியுசி உதவித் தலைமைச் செயலாளருமான பேட்ரிக் டே, சிங்கப்பூரர்களுக்கு வேலை வாய்ப்பிற்கும் தொழில் ஆதரவிற்கும் அரசாங்கம் இன்னும் உறுதியாக முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றார்.

ஊழியர் பற்றாக்குறையை எதிர்நோக்கிவரும் துறைகளில், முக்கியத் திறன்கள் தேவைப்படும் வேலைகளுக்கு வெளிநாட்டு ஊழியர்களைப் பணியமர்த்தலாம் என்று சொன்ன அவர், அதே நேரத்தில் வெளிநாட்டு ஊழியர்களை அதிகம் நம்பியிருக்கக்கூடாது என்றும் குறிப்பிட்டார்.

“போட்டித்தன்மைமிக்க, அதே வேளையில் வெளிநாட்டு ஊழியர்களைக் குறைவாகச் சார்ந்திருக்கும் வகையில், சிங்கப்பூரர்களை மையமாகக் கொண்ட வலிமையான ஊழியரணியாக இருந்தால் சிங்கப்பூரின் பொருளியலும் வலுவாகும்,” என்று அவர் சொன்னார்.

இதேபோன்ற கருத்தை எதிரொலித்த பாட்டாளிக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஃபைசல் மனாப் (அல்ஜுனிட் குழுத் தொகுதி), குறைந்தபட்ச வெளிநாட்டு ஊழியர் ஒதுக்கீட்டில் அதிக சிங்கப்பூரர்களைச் சேர்க்கும் நிறுவனங்களுக்குப் பொருளியல் ஊக்குவிப்புகள் வழங்கப்பட வேண்டும் யோசனை தெரிவித்தார்.

பிரதமர் அலுவலக மூத்த துணை அமைச்சரும் என்டியுசியின் துணை தலைமைச் செயலாளருமான டெஸ்மண்ட் டான், அண்மைய வரவுசெலவுத் திட்டம், தொழிலாளர்கள் மற்றும் நிறுவனங்களின் உடனடித் தேவைகளுக்குத் தீர்வுகாணும் வகையிலும் அதே சமயத்தில் போட்டித்தன்மையுடன் நீடித்திருக்க நீண்டகால உத்திகளை முன்வைப்பதாகவும் அமைந்துள்ளது எனக் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்