சிறிய வீடுகளுக்கான தேவை அதிகரிப்பு

2 mins read
ba5fc993-02f2-45dc-b8c5-57e30453dc97
2024 ஜனவரி முதல் நவம்பர் வரை 740 ஈரறை வீடுகள் விற்கப்பட்டன. 2020ஆம் ஆண்டைக் காட்டிலும் அது கிட்டத்தட்ட இருமடங்கு. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் கடந்த நான்காண்டுகளில் சிறிய வீடுகளுக்கான தேவை படிப்படியாக அதிகரித்து வருவதாக சொத்துச் சந்தை கவனிப்பாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

அதற்கு உதாரணமாக திரு லிம் என்பவரின் பரிவர்த்தனையை ‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ வெளியிட்டு உள்ளது.

34 வயது கணினித் தொழில்நுட்ப நிர்வாகியான திரு லிம், தெம்பனிஸில் உள்ள தமது மூவறை வீவக வீட்டிலிருந்து நாலறை வீட்டுக்கு மாற விரும்பினார்.

தற்போதைய மூவறை வீட்டிற்கான குறைந்தபட்சக் குடியிருப்புக் காலம் (MOP) எட்டப்பட்டதும் 2023 செப்டம்பரில் அந்த வீட்டை விற்பதாக அறிவித்து அதற்கான விலை $470,000 என்றும் தெரிவித்து இருந்தார்.

அதற்கு எதிர்பாராத வரவேற்பு இருந்தது. பலரும் அந்த வீட்டை வாங்க விருப்பம் தெரிவித்து இருந்தனர். இறுதியாக, அறிவிக்கப்பட்ட விலையைக் காட்டிலும் கூடுதலாக $480,000க்கு அந்த வீட்டை ஒற்றையரான ஒரு பெண்மணி வாங்கினார்.

அந்தச் சம்பவம் சிறிய வீட்டுக்கான தேவை அதிகரித்து வருவதை உணர்த்துவதாக சொத்துச் சந்தைக் கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.

பெரிய வீடு வாங்க அதிகம் செலவாகும் என்ற மனப்போக்கும் மக்கள்தொகையில் ஏற்பட்டு வரும் மாற்றமும் அந்த நிலவரத்தைப் பிரதிபலிப்பதாக அவர்கள் தெரிவித்து உள்ளனர்.

மூப்படைதல், குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை சுருங்குதல், தனியாக வாழ விரும்பும் ஒற்றையர்கள் போன்ற மக்கள்தொகை மாற்றம் சிறிய வீடுகளுக்கான தேவை அதிகரிப்புக்கு முக்கிய காரணம் என்கின்றனர் பகுப்பாய்வாளர்கள்.

அவர்களின் ஒருவரான திருவாட்டி கிறிஸ்டின் சன், இவ்வாண்டு ஜனவரி முதல் நவம்பர் வரை 740 ஈரறை வீடுகள் விற்கப்பட்டு உள்ளதாகவும் 2020ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் அது கிட்டத்தட்ட இருமடங்கு என்றும் கூறினார்.

2020 ஜனவரி முதல் நவம்பர் வரை மொத்தம் 388 ஈரறை வீடுகளே விற்கப்பட்டதாகக் கூறினார் ஆரஞ்சுடீ குரூப் என்னும் சொத்து நிறுவனத்தின் தலைமை ஆய்வாளரான திருவாட்டி சன்.

அதேபோல, இந்த 11 மாதங்களில் மூவறை வீடுகளுக்கான பரிவர்த்தனை 30 விழுக்காடும் நாலறை வீடுகளுக்கான பரிவர்த்தனை 27.7 விழுக்காடும் ஐந்தறை வீடுகளுக்கான பரிவர்த்தனை 13.7 விழுக்காடும் அதிகரித்தன.

இந்த வீடுகளின் சராசரி மறுவிற்பனை விலைகளும் ஏற்றம் கண்டு உள்ளன.

2024 ஜனவரி முதல் நவம்பர் வரை ஈரறை வீடுகளின் விலை, 2020ஆம் ஆண்டு அதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 45.4 விழுக்காடு அதிகரித்துக் காணப்பட்டது.

அதேபோல, மூவறை வீடுகளின் மறுவிற்பனை விலை 41 விழுக்காடு ஏற்றம் கண்டது.

ஈரறை மற்றும் மூவறை வீடுகளின் மீதான ஆர்வம் அதிகரித்துள்ளதற்கு பல்வேறு காரணிகள் இருப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

அதுபோன்ற பல வீடுகளுக்கான குறைந்தபட்சக் குடியிருப்புக் காலம் (MOP - எம்ஓபி) அண்மையில் நிறைவடைந்தது அந்தக் காரணிகளுள் ஒன்று என்றார் திருவாட்டி சன்.

2019ஆம் ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டு 15,642 ஈரறை வீடுகளுக்கான எம்ஓபி நிறைவடைந்தது.

2013ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியோடு ஒப்பிடுகையில் இது 234.2 விழுக்காடு அதிகம்.

அப்போது வெறும் 4,627 ஈரறை, மூவறை வீடுகள் எம்ஓபியை நிறைவு செய்திருந்தன.

குறிப்புச் சொற்கள்