முதிய சமுதாயத்தை கவனித்துக்கொள்வது அவசியம்: பிரதமர் லாரன்ஸ் வோங்

2 mins read
9dc2e008-29c3-43e3-a9f2-f18ff450f062
“நீண்ட ஆயுள் நன்றே - ஆனால் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வது முக்கியம். அரசாங்கம் பல திட்டங்களை முன்வைத்தாலும், இது ஒருங்கிணைந்த சமூக முயற்சியாகும்,” என்றார் பிரதமர் லாரன்ஸ் வோங். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 3

சிங்கப்பூரில் குடும்பத்திற்கு ஏற்ற சூழலை உருவாக்க நம் முதியவர்களைக் கவனித்துக்கொள்வது அவசியம் என்றார் பிரதமர் லாரன்ஸ் வோங்.

மக்கள் செயல் கட்சி சமூக அடித்தள இயக்கமான ‘பிசிஎஃப்’ (PCF) அக்டோபர் 6ஆம் தேதி நடத்திய குடும்ப தினக் கொண்டாட்டங்களில் பிரதமர் அவ்வாறு கூறினார். 

இவ்வாண்டின் தேசிய தின உரையில் குடும்பங்களுக்கும் பெற்றோருக்கும் பல உதவித் திட்டங்களை அறிவித்த பிரதமர், அதிகரிக்கும் முதியவர்களைக் கவனிக்கும் முக்கியத்துவம் பற்றியும் எடுத்துரைத்தார். 

நிகழ்ச்சியில், உள்துறை இரண்டாம் அமைச்சர் ஜோசஃபின் டியோ, கலாசார, சமூக, இளையர்துறை மூத்த துணை அமைச்சர் லோ யென் லிங் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். பெற்றோர், குழந்தைகள், ஆசிரியர்கள், மூத்தோர், இதர சமூக நிறுவனங்களைச் சேர்ந்தோர் ஆகியோரும் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.

‘விளையாட்டு வழி கற்றல்’ (Learning Through Play) என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு  இவ்வாண்டின் ‘பிசிஎஃப்’ குடும்ப தினம் ‘என்டியுசி கிளப் பெகோனியா பெவிலியன்’ (NTUC Club Begonia Pavilion) வளாகத்தில் நடைபெற்றது. 

பாலர் பள்ளி மாணவர்கள், முதியவர்கள் படைத்த ஆடல், இசை அங்கமும், சமூக நிறுவனங்களை அங்கீகரித்தல் போன்ற அங்கங்களும் நிகழ்ச்சியில் இடம்பெற்றன. அத்துடன், சிறு விளையாட்டு மற்றும் உணவுக் கூடாரங்கள் வந்திருந்தோரை மகிழ்வித்தன. 

வழக்கமாக பாலர் பள்ளிகளை நிர்வகிக்கும் ‘பிசிஎஃப்’ இயக்கம், மூத்த குடிமக்கள் பராமரிப்புச் சேவைகளை அளிக்க முன்வந்தது. அதன் ஒரு பகுதியாக தற்போது சிங்கப்பூரில் 9 மூத்த பராமரிப்பு நிலையங்களும் 4 முதியோர் நிலையங்களும் உள்ளன. 

“சுறுசுறுப்பைத் தவிர முதியவர்களுக்கு சமூக உறவுகள் முக்கியம் - வயதான காலத்தில் யாரும் தனிமையில் இருக்கக்கூடாது என்பதே நோக்கம்,” என்றார் ‘பிசிஎஃப்’ முதியோர் பராமரிப்புப் பிரிவின் மூத்த இயக்குநர் ஆண்டி சீட். 

2025ம் ஆண்டுக்குள், மேலும் மூன்று புதிய முதியோர் பராமரிப்பு நிலையங்களை ‘பிசிஎஃப்’ அறிமுகப்படுத்த உள்ளது. சிங்கப்பூரின் கிழக்கு மற்றும் மேற்கு வட்டாரங்களில் வசிக்கும் முதியவர்களுக்குத் தேவையான பராமரிப்பில் இந்த நிலையங்கள் கவனம் செலுத்தும்.

“நீண்ட ஆயுள் நன்றே - ஆனால் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வது முக்கியம். அரசாங்கம் பல திட்டங்களை முன்வைத்தாலும், இது ஒருங்கிணைந்த சமூக முயற்சியாகும்,” என்றார் பிரதமர் வோங். 

குறிப்புச் சொற்கள்