1980ஆம் ஆண்டு அல்லது அதற்குமுன் பிறந்த சிங்கப்பூரர்கள், குழந்தைப் பருவத்தில் பெரியம்மைக்கான தடுப்பூசி போட்டுக்கொண்டிருந்தால் அவர்களுக்குக் குரங்கம்மைத் தொற்றிலிருந்து குறிப்பிடத்தக்க அளவிலான பாதுகாப்பு இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
பெரியம்மை, குரங்கம்மை இரண்டுமே ‘ஆர்த்தோபாக்ஸ்’ வகைக் கிருமிகள் என்பதால் பெரியம்மைத் தடுப்பூசி, குரங்கம்மைத் தொற்றிலிருந்தும் பாதுகாப்பு அளிக்கும் எனக் கூறப்படுகிறது.
சிங்கப்பூரில் 1869ஆம் ஆண்டு, பெரியம்மைக்கான தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டது. பின்னர் 1980ஆம் ஆண்டு பெரியம்மை முற்றிலுமாகத் துடைத்தொழிக்கப்பட்டதாக உலகச் சுகாதார நிறுவனம் அறிவித்ததைத் தொடர்ந்து 1981ஆம் ஆண்டு பெரியம்மைத் தடுப்பூசி போடுவது நிறுத்தப்பட்டது.
தற்போது குரங்கம்மைக்கு எதிரான தடுப்பாற்றலுக்காகப் போடப்படும் ஜின்னியோஸ் தடுப்பூசி, பெரியம்மைக்கு எதிரான தடுப்பாற்றலுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது.
பெரியம்மை தொடர்பிலான மூன்றாம் தலைமுறைத் தடுப்பு மருந்தான இது, குரங்கம்மைத் தொற்றிலிருந்து பாதுகாப்பதில் 80 விழுக்காட்டுச் செயல்திறனைக் கொண்டுள்ளது.
பெரியம்மைக்கு எதிரான முதல் தலைமுறைத் தடுப்பூசியின் செயல்திறன் 95 விழுக்காடு என்று அமெரிக்க நோய்க் கட்டுப்பாடு, தடுப்பு நிலையம் கூறியது. அடுத்தடுத்த தலைமுறை தடுப்பூசிகளும் பாதுகாப்பானவையே என்று அது குறிப்பிட்டது.
பெரியம்மையால் ஏற்படும் மரணத்தைத் தடுக்கும் தடுப்பூசியின் ஆற்றல் பல்லாண்டு நீடிக்கும் என்றபோதும் காலப்போக்கில் தடுப்பூசியின் பாதுகாக்கும் ஆற்றல் குறையும். சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் சா சுவீ ஹொக் பொதுச் சுகாதாரக் கல்லூரியின் துணைத் தலைவரான பேராசிரியர் ஹு லி யாங் இவ்வாறு கூறினர்.
பெரியம்மைத் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு ஒருவேளை குரங்கம்மை தொற்றினாலும் நோய்க்கான அறிகுறிகள் குறைவாகவே இருக்கும் என்றார் அவர்.
தொடர்புடைய செய்திகள்
காய்ச்சல், தசை வலி, உடலின் நோய் எதிர்ப்பாற்றலில் முக்கியப் பங்கு வகிக்கும் நிணநீர் முடிச்சுகளில் வீக்கம், வலி அல்லது அரிப்பு ஏற்படுத்தக்கூடிய கொப்புளங்கள் போன்றவை குரங்கம்மையின் அறிகுறிகள்.
கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி, குரங்கம்மை அனைத்துலக அளவில் கவலைக்குரிய பொதுச் சுகாதார நெருக்கடி என்று உலகச் சுகாதார நிறுவனம் இரண்டாவது முறையாக அறிவித்தது.
ஏற்கெனவே 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் இத்தகைய அறிவிப்பை அது வெளியிட்டது. அது 2023ஆம் ஆண்டு மே மாதம் வரை நடப்பிலிருந்தது.
குரங்கம்மைப் பரவல் தொடர்பான சிங்கப்பூரின் தயார்நிலை குறித்து செப்டம்பர் முதல் வாரம் சுகாதார அமைச்சர் ஓங் யி காங் தலைமையில் நடைபெறும் செய்தியாளர் கூட்டத்தில் விவரங்கள் பகிரப்படும் என்று கூறப்பட்டுள்ளது.