திருமதி பேர்ல் டிங் தனது கடன் அட்டை விவரங்களை மோசடிக்காரர்களிடம் ஒப்படைக்க இருந்தார். ஆனால் அவரது கணவரின் நிதி இழப்பு அவரைத் தயங்க வைத்தது.
சிங்போஸ்ட்டில் இருந்து வந்ததாகக் கூறப்படும் ஒரு குறுஞ்செய்தியை 2022ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தான் பெற்றதாக அந்த 72 வயது பணி ஓய்வுப்பெற்றவர் நினைவு கூர்கிறார். அவரது பார்சல் வழியில் சிக்கிக்கொண்டதாக அது கூறியது. அதை விடுவிக்க அவர் செய்ய வேண்டியதெல்லாம் $12 செலுத்துவது மட்டுமே.
“நான் எந்தவொரு பார்சலையும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் ஒருவேளை நான் மறந்துவிட்டேனோ என்று நினைத்தேன்?” என்கிறார் வாரத்திற்கு ஒருமுறை உணவு மற்றும் உடைகள் போன்ற பொருள்களை இணையத்தில் வாங்கும் திருமதி டிங்.
அவர் அந்தச் செய்தியில் உள்ள இணைப்பைக் கிளிக் செய்தார். மேலும் “சிங்போஸ்ட்” நிறுவனச் சின்னம் உள்ள ஒரு வலைப்பக்கத்தை அடைந்தார். கட்டணத்தைச் சமர்ப்பிப்பதற்குச் சற்று முன்பு, சில வாரங்களுக்கு முன்புதான் தனது கணவர் ஒரு வணிகப் பங்காளி போல் ஆள்மாறாட்டம் செய்த மோசடிக்காரரிடம் நான்கு இலக்கத் தொகையை இழந்ததை அவர் நினைவு கூர்ந்தார்.
கவலையடைந்த திருமதி டிங், அந்தக் குறுஞ்செய்தியைத் தன்னுடன் வசிக்கும் தனது மருமகளிடம் காட்ட முடிவு செய்தார்.
அந்த 31 வயது இளம்பெண், அது ஒரு மோசடி என்பதை அடையாளம் கண்டு, திருமதி டிங்கின் அட்டை விவரங்கள் திருடப்பட்டிருக்கலாம் என்பதால், அட்டையை முடக்க வங்கிக்கு அழைக்க உதவினார்.
திருமதி டிங் தப்பினார். ஆனால் பல முதியவர்கள் தப்பவில்லை.
சிங்கப்பூர் காவல்துறையின் புள்ளிவிவரங்கள்படி, 2025ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் உள்ள அனைத்து வயதினரையும் விட 65 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினரே அதிக சராசரி இழப்பைச் சந்தித்துள்ளனர் – பாதிக்கப்பட்ட ஒருவருக்கு $37,053 வீதம் – இவர்கள் ஒட்டுமொத்த மோசடியால் பாதிக்கப்பட்டவர்களில் 14.8 விழுக்காட்டினராக இருந்தபோதிலும் இந்த இழப்பு ஏற்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
நம்பிக்கை, பயம் ஆகியவற்றைப் பயன்படுத்திக் கொள்ளும் மற்றும் அவசர உணர்வை உருவாக்கும் மோசடிகளுக்கு முதியவர்கள் குறிப்பாக ஆளாகிறார்கள் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
நம்பிக்கையே ஒரு வலையாக மாறுகிறது
மோசடி செய்பவர்களுக்கு முதியவர்கள் குறிப்பாக ஈர்க்கக்கூடிய இலக்குகளாக இருக்கிறார்கள், என்கிறார் லீ குவான் யூ பொதுக் கொள்கைப் பள்ளி மற்றும் இடர் பற்றிய பொதுப் புரிதலுக்கான நிறுவனத்தைச் சேர்ந்த தரவு மற்றும் நடத்தை அறிவியலாளர் பேராசிரியர் ரூபன் இங்.
அதற்கு ஒரு காரணம், சில முதியவர்கள் பல ஆண்டுகால உழைப்பின் மூலம் சேமிப்பைச் சேர்த்துள்ளதால், இளையர்களைவிட ஒப்பீட்டளவில் வசதியாக இருக்கிறார்கள் என்று அவர் கூறுகிறார்.
சிங்கப்பூரின் முன்னோடித் தலைமுறையினர் நெருக்கமான கம்பத்துச் சூழலில் வளர்ந்தவர்கள். மேலும் நல்லாட்சி அவர்களின் வாழ்க்கையை எவ்வாறு மாற்றியது என்பதைக் கண்ணுற்றவர்கள் என்று பேராசிரியர் இங் கூறுகிறார். “(அவர்கள்) மக்கள் (நிறுவனங்கள் மற்றும் அதிகாரத் தலைவர்கள் மீது) அதிக நம்பிக்கை வைத்திருந்த ஒரு காலத்திலிருந்து வந்தவர்கள்.”
நெதர்லாந்தைத் தளமாகக் கொண்ட லாப நோக்கற்ற உலகளாவிய மோசடி எதிர்ப்புக் கூட்டணியால் வழங்கப்பட்ட 2025ஆம் ஆண்டிற்கான சிறந்த மோசடி போராளி (Scam Fighter of the Year) விருதுக்கு பேராசிரியர் இங் இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.
அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம் (UNDP) 2024ல் வெளியிட்ட மோசடி எதிர்ப்பு கையேட்டின் உருவாக்கத்திற்கு இணையாகத் தலைமை தாங்கியதற்காக அவர் அங்கீகரிக்கப்பட்டார்.
“சிங்கப்பூர் (மேலும்) ஒப்பீட்டளவில் பாதுகாப்பானது,” என்று பேராசிரியர் இங் கூறுகிறார். “முதியவர்கள் கொண்டுள்ள இந்த உடல் ரீதியான பாதுகாப்பு உணர்வின் சில மாற்றங்கள் இணையவெளிக்கும் கடத்தப்படுகின்றன. அங்கு அவர்கள் உண்மையில் அதிக சந்தேகத்துடன் இருக்க வேண்டும்.”
இது, அரசாங்க அதிகாரி போல் ஆள்மாறாட்டம் செய்யும் மோசடிகள் (GOIS) போன்ற நம்பிக்கை மற்றும் அதிகாரத்தைப் பயன்படுத்தும் மோசடிகளுக்கு அவர்களை எளிதில் ஆளாக்குகிறது என்று அவர் மேலும் கூறுகிறார்.
காவல்துறை தரவுகளின்படி, முதலீட்டு மோசடிகளுக்கு அடுத்தபடியாக முதியவர்கள் அதிகம் ஏமாறும் இரண்டாவது பொதுவான மோசடி வகை GOIS ஆகும்.
GOIS மோசடிகளில், மோசடி செய்பவர்கள் காவல்துறை அல்லது பிற அரசு நிறுவனங்களின் அதிகாரிகள் போல் ஆள்மாறாட்டம் செய்து, பணமோசடி போன்ற குற்றச் செயல்களுக்கான “விசாரணைகள்” என்ற போர்வையில் அல்லது காவலில் வைப்பதாக மிரட்டி, பாதிக்கப்பட்டவர்களிடம் பணம் அல்லது மதிப்புமிக்க பொருள்களை ஒப்படைக்குமாறு கேட்கிறார்கள்.
ஊர் கூடி தேர் இழுக்கவேண்டும்
மூத்தோர் ஏதோ தவறு நடப்பதை உணர்ந்தாலும், அந்தச் சூழ்நிலையிலிருந்து வெளியேறுவது சவாலாக இருக்கும்.
மோசடி செய்பவர்கள் அவசர உணர்வை உருவாக்குவது போன்ற உத்திகளைப் பயன்படுத்துகிறார்கள். மூத்தோரை உடனடியாகச் செயல்படுமாறு கட்டாயப்படுத்துகிறார்கள் என்று எஸ்ஐடி கற்பித்தல் மற்றும் கற்றல் கல்விக்கழகத்தின் துணை இயக்குநரும் ஊடக அறிவுத்திறன் மன்றத்தின் உறுப்பினருமான இணைப் பேராசிரியர் ஜியோவ் ஹீ ஜீ கூறுகிறார்.
இது ஆபத்துகளைக் கண்டறிய உதவக்கூடிய குடும்ப உறுப்பினர்கள் அல்லது நண்பர்களுடன் கலந்தாலோசிக்க அவர்களுக்கு நேரம் கொடுப்பதில்லை என்று அவர் விளக்குகிறார்.
GOIS போன்ற மோசடிகளில், மோசடி செய்பவர்கள் பாதிக்கப்பட்டவர்களின் புத்தியை மழுங்கடிக்க பயத்தைப் பயன்படுத்துகிறார்கள். மேலும் பீதி ஏற்படும் போது, பாதிக்கப்பட்டவர்கள் மோசடி செய்பவர்களின் அடையாளங்களையும் கோரிக்கைகளையும் சரிபார்க்கும் வாய்ப்புகள் குறைவு என்று பேராசிரியர் ஜியோவ் கூறுகிறார்.
பேராசிரியர் இங் மேலும் கூறுகையில், சில மூத்தோர் தாங்கள் மோசடி செய்யப்பட்டுள்ளதாக சந்தேகிக்கும்போது கூட, குடும்ப உறுப்பினர்கள் அல்லது நண்பர்களிடம் உதவி கேட்கத் தயங்கலாம்.
பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் சங்கட உணர்வுகளுடனும் “கௌரவ இழப்புடனும்” போராடுகிறார்கள் என்று அவர் கூறுகிறார்.
“அங்குதான் (24/7 இயங்கும்) ஸ்கேம்ஷீல்ட் (ScamShield) உதவி எண் முக்கியத்துவம் பெறுகிறது,” என்று அவர் விளக்குகிறார். இந்த உதவி எண் ரகசியத்தன்மையை வழங்குகிறது. இது முதியவர்கள் தங்களை வெளிப்படுத்திக் கொள்ளாமலோ வெட்கப்படாமலோ கேள்விகளைக் கேட்க அல்லது உறுதியைப் பெற எளிதாக்குகிறது.
“அழைப்பதில் எந்தவொரு ‘கௌரவக் குறைச்சலும்’ இல்லை,” என்று பேராசிரியர் இங் கூறுகிறார்.
மோசடி தடுப்பு என்பது தனிநபர்களை மட்டுமே சார்ந்திருக்க முடியாது என்று இரண்டு நிபுணர்களும் வலியுறுத்துகிறார்கள்.
“மோசடி நடப்பதற்கு தனிநபர் ஒரு (பலவீனமான கண்ணியாக) இருக்கலாம், ஆனால் குடும்பம், சமூகம் மற்றும் நமது அமைப்புகள் தான் அதை எதிர்த்துப் போராடுகின்றன,” என்று பேராசிரியர் இங் கூறுகிறார்.
முதியவர்களைப் பாதுகாப்பதில் சமூகத்தின் முக்கியத்துவத்தை பேராசிரியர் ஜியோவ் வலியுறுத்துகிறார். “முதியவர்கள் தங்களுக்கு வசதியான ஓர் ஆதரவு கட்டமைப்பைக் கொண்டிருக்கும்போது,” அவர்கள் மோசடிகளுக்கு எதிராக அதிக மீள்திறன் கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்று அவர் கூறுகிறார்.
மோசடி முயற்சிக்குப் பிறகு, திருமதி டிங் இணையத்தில் அதிக எச்சரிக்கையுடன் இருக்கிறார். தனது மருமகளின் உதவியுடன், மோசடி அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளைத் தடுக்க தனது தொலைபேசியில் ஸ்கேம்ஷீல்ட் செயலியைப் பதிவிறக்கம் செய்துள்ளார்.
அவர் சக முதியவர்களுக்குக் கூறும் அறிவுரை: கோரப்படாத செய்திகள் எவ்வளவு நம்பகமானதாகத் தோன்றினாலும், அவற்றைச் சந்தேகக் கண்ணோடு அணுகுங்கள்.
“எந்தவொரு (இணைப்புகளையும்) கிளிக் செய்வதற்கு முன், முதலில் சரியாகச் சரிபார்க்கவும் (மேலும்) அதை உடனே நம்பிவிடாதீர்கள்,” என்று திருமதி டிங் கூறுகிறார்.
“(சந்தேகமாக இருக்கும்போது), குடும்ப உறுப்பினர்களிடம் சரிபார்க்கவும் அல்லது பார்க்க உங்கள் பிள்ளைகளிடம் உதவி கேட்கவும்.”
மூத்தோரை மோசடிகளிலிருந்து பாதுகாப்பாக வைத்திருத்தல்
தங்களுக்கு நெருக்கமான மூத்தோரைக் குடும்ப உறுப்பினர்களும் நண்பர்களும் எவ்வாறு பாதுகாக்கலாம் என்பது குறித்த நிபுணர்களின் உதவிக்குறிப்புகள்.
மோசடிகளைப் பற்றிப் பேசுங்கள்: இது மோசடிகள் எவ்வாறு நடக்கின்றன என்பதைப் புரிந்துகொள்ளவும், ஆபத்துகளை எவ்வாறு கண்டறிவது என்பதை அறியவும் மூத்தோருக்கு உதவும்.
பாதுகாப்பு வரம்புகளை உருவாக்குங்கள்: அறிமுகமில்லாத அழைப்புகளைத் துண்டித்துவிட்டு, தாங்கள் நம்பும் ஒருவரிடம் சரிபார்க்க அல்லது ஸ்கேம்ஷீல்ட் திறன்பேசி செயலி போன்ற அதிகாரத்துவ ஆதாரங்கள் மூலம் சரிபார்க்க முதியவர்களை ஊக்குவிக்கவும். அல்லது 24/7 இயங்கும் ஸ்கேம்ஷீல்ட் உதவி எண்ணான 1799ஐ அழைக்கவும்.
தொழில்நுட்பத் தடுப்புகளை அமைக்கவும்: மோசடி அழைப்புகள் மற்றும் செய்திகளைத் தடுக்க குடும்பத்தில் உள்ள முதியவர்களுக்கு ஸ்கேம்ஷீல்ட் செயலியை நிறுவ உதவுங்கள். சமூக ஊடகங்கள் மற்றும் செய்தி அனுப்பும் தளங்களில் தனியுரிமை அமைப்புகளை (privacy settings) இயக்கவும்.

