இவ்வாண்டு பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற்ற ஒலிம்பிக் மற்றும் உடற்குறையுள்ளோருக்கான பாரா ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற சிங்கை வீரர்கள் நாடாளுமன்றத்தில் புதன்கிழமை (அக்டோபர் 16) கௌரவிக்கப்பட்டனர்.
இதற்கான தீர்மானத்தை கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சரும் சட்ட இரண்டாம் அமைச்சருமான எட்வின் டோங் முன்வைத்தார்.
ஜூலை மாதம் 26ஆம் தேதிக்கும் ஆகஸ்ட் 11ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் சிங்கப்பூர் சார்பில் 23 வீரர்கள் பங்கேற்றனர்.
அவர்களில், ஆண்கள் அலையாடல் (கைட்ஃபோய்லிங்) போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார் 18 வயது வீரர் மேக்சிமிலியன் மெய்டர்.
நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் இந்த விளையாட்டுப் போட்டிகளில் சிங்கப்பூர் பெற்ற ஆறாவது பதக்கம் இது.
ஆகஸ்ட் 28ஆம் தேதிக்கும் செப்டம்பர் 8ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் நடந்த உடற்குறையுள்ளோருக்கான பாரா ஒலிம்பிக் போட்டிகளில் சிங்கப்பூர் சார்பில் 10 வீரர்கள் பங்கேற்றனர்.
அவர்களில், யிப் பின் சியூ நீச்சலில் இரண்டு தங்கப் பதக்கம் வென்றார்.
போச்சா (Boccia) விளையாட்டில் முதல்முறையாக சிங்கை வீராங்கனை ஜெரலின் டான் வெள்ளிப் பதக்கத்தை பெற்றுத் தந்தார்.

