தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பலவாகன விபத்து: உயிரிழந்த இருவரில் தெமாசெக் தொடக்கக் கல்லூரி மாணவியும் ஒருவர்

2 mins read
987f4239-9907-4cf8-a2e7-421af661520a
தெம்பனிசில் ஏப்ரல் 22ஆம் தேதி காலை நடந்த பலவாகன விபத்தில் குறைந்தது இருவர் உயிரிழந்தனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தெம்பனிசில் ஏப்ரல் 22ஆம் தேதி காலை நடந்த பலவாகன விபத்தில் குறைந்தது இருவர் உயிர் இழந்தனர்.

மொத்தம் எட்டுப் பேர் மருத்துவமனைகளுக்குக் கொண்டுசெல்லப்பட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.

நால்வர் சாங்கி பொது மருத்துவமனைக்கும், இருவர் டான் டோக் செங் மருத்துவமனைக்கும், இருவர் கேகே மகளிர், சிறார் மருத்துவமனைக்கும் கொண்டுசெல்லப்பட்டனர்.

தெம்பனிஸ் அவென்யூ 1க்கும் தெம்பனிஸ் அவென்யூ 4க்கும் இடைப்பட்ட சாலை சந்திப்பில், நான்கு கார்கள், ஒரு வேன், ஒரு சிறு பேருந்து சம்பந்தப்பட்ட விபத்து குறித்து காலை 7.05 மணிவாக்கில் தகவல் கிடைத்ததாக குடிமைத் தற்காப்புப் படை கூறியது.

கறுப்பு நிறக் கார் ஒன்று அதிவேகத்தில் மற்ற மூன்று வாகனங்களைத் தாண்டிச் செல்வதை எஸ்ஜி ரோட் விஜிலாண்டே ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட காணொளியில் காணமுடிந்தது.

கறுப்பு நிறக் கார் தலைகீழாகக் கவிழ்ந்து கிடந்ததை, விபத்துக்குப் பின்னர் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் காணமுடிந்தது. மற்றொரு கறுப்பு நிறக் கார் மோசமாகச் சேதமுற்றது.

கவிழ்ந்து கிடந்த காரில் இருந்த 17 வயது அஃபிஃபா முனிரா முகம்மது அஸ்ரில், உயிர் இழந்தவர்களில் ஒருவர். அவர் தெமாசெக் தொடக்கக் கல்லூரியின் முதலாம் ஆண்டு மாணவி.

உயிர் இழந்த மற்றொருவர் ‘ஃபர்ஸ்ட் சாய்ஸ் பெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட்’ நிறுவனத்துக்குச் சொந்தமான வேனில் இருந்த 57 வயது பெண் பயணி.

சாலையில் கிடந்த ஒருவரின் கால் காரின் சக்கரத்திற்கு அடியில் சிக்கியிருந்தது. அவரின் காலை வெளியே எடுக்க நீரழுத்த மீட்புக் கருவி பயன்படுத்தப்பட்டதாக குடிமைத் தற்காப்புப் படை கூறியது.

தாதி ஒருவர், வேலைநேரத்தில் இல்லாத சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர் இருவர் உட்பட, பொதுமக்களில் சிலர் உதவினர் என்றும் அவர்களுக்கு பாராட்டுகள் வழங்கப்படும் என்றும் குடிமைத் தற்காப்புப் படையினர் தெரிவித்தனர்.

Watch on YouTube
View post on Instagram
 
குறிப்புச் சொற்கள்