உயர் தொடக்கநிலை மாணவர்களில் நால்வரில் ஒருவர் துன்புறுத்தப்பட்டவர்: கருத்தாய்வு

உயர் தொடக்கநிலை மாணவர்களில் நால்வரில் ஒருவர் துன்புறுத்தப்பட்டவர்: கருத்தாய்வு

2 mins read
9a1fa8f1-da09-48f6-b92e-0d7a7a409043
படம்: - jodymichael.com

சிங்கப்பூரில் தொடக்கப் பள்ளி மாணவர்களில் நால்வரில் ஒருவர் துன்புறுத்தலுக்கு (bullying) ஆளானது கருத்தாய்வு ஒன்றில் தெரியவந்துள்ளதாக சிஎன்ஏ ஊடகம் தெரிவித்துள்ளது.

அவர்களில் ஒருசிலர், தாங்களே பிறரைத் துன்புறுத்தியதாகவும் தெரிவித்தனர்.

தேசிய கல்விக் கழக ஆய்வாளர் ஒருவர் நடத்திய கருத்தாய்வில் இத்தகவல்கள் தெரியவந்தன. சிங்கப்பூர் சிறுவர் சங்கம், சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் ஆகியவற்றுடன் இணைந்து இந்தக் கருத்தாய்வு மேற்கொள்ளப்பட்டது.

இன்னும் வெளியிடப்படாத கருத்தாய்வின் முடிவுகள் சரிபார்க்கப்பட்டுவிட்டன.

ஒன்பதிலிருந்து 13 வயதுக்கு உட்பட்ட உயர் தொடக்கநிலை (upper primary) மாணவர்கள் 581 பேரைக் கொண்டு இந்தக் கருத்தாய்வு நடத்தப்பட்டது. சம்பந்தப்பட்ட மாணவர்களின் பராமரிப்பாளர்களும் கருத்தாய்வில் பங்கேற்றனர்.

கருத்தாய்வில் பங்கேற்ற 23 விழுக்காட்டு மாணவர்கள், கடந்த இரண்டிலிருந்து மூன்று மாதங்களில் தாங்கள் துன்புறுத்தலுக்கு ஆளானதாகத் தெரிவித்தனர்.

துன்புறுத்தலுக்கு ஆளான பிறகு மாணவர்கள் பொதுவாக தங்கள் நண்பர்கள், சக மாணவர்கள், பெற்றோரைத்தான் முதலில் நாடுகின்றனர். அதற்குப் பிறகே அவர்கள் ஆசிரியர்கள் அல்லது பள்ளி மனநல ஆலோசகர்களை நாடுகின்றனர் என்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்.

இது, ஆச்சரியம் தரும் ஒன்று என்றார் இந்தக் கருத்தாய்வின் தலைமை ஆய்வாளரும் தேசிய கல்விக் கழகத்தின் உளவியல், சிறார் மற்றும் மனித வளர்ச்சிப் பிரிவின் துணைப் பேராசிரியருமான சியூங் ஹோய் ‌ஷான் கூறினார்.

“துன்புறுத்தப்பட்டதை மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களிடம் தெரியப்படுத்துவர் என்றுதான் எதிர்பார்ப்போம்.ஏனெனில், அந்தச் சூழலில்தான் துன்புறுத்தல் இடம்பெற்றுள்ளது. பள்ளியில் துன்புறுத்தல் நடக்கும்போது ஆசிரியர்களே எளிதில் நாடக்கூடிய பெரியவர்கள் ஆவர்,” என்று அவர் குறிப்பிட்டார்.

குடும்பத்தாரின் ஆதரவு கருத்தில்கொள்ளப்படும்போது சம்பந்தப்பட்ட சூழலில் சக மாணவர்களின் ஆதரவு, துன்புறுத்தல், அதனால் பாதிக்கப்பட்டோர் ஆகியவற்றில் அதிக மாற்றவில்லை என்பது கருத்தாய்வில் தெரிய வந்தது.

எனினும், பல வேளைகளில் துன்புறுத்துவோரைக் கண்டுகொள்ளாமல் இருக்குமாறும் அதைப் பற்றி ஆசிரியர்களிடம் தெரியப்படுத்துமாறும் பெற்றோர், பிள்ளைகளைக் கேட்டுக்கொள்வதாகக் கூறினார் துணைப் பேராசிரியர் சியூங். நிலைமையைக் கண்டுகொள்ளாமல் இருப்பது நல்ல தீர்வாக இருக்கும் என்ற அவசியம் கிடையாது என்றும் அவர் சுட்டினார்.

கடந்த ஐந்தாண்டுகளில் துன்புறுத்தல் சம்பவங்களின் எண்ணிக்கையில் அதிக மாற்றம் இல்லை என்று கல்வி அமைச்சு குறிப்பட்டது. துன்புறுத்தல் நடக்காமல் இருக்க வகைசெய்யும் அணுகுமுறைகளைத் தாங்கள் தொடர்ந்து ஆராய்வதாகவும் அமைச்சு குறிப்பிட்டது.

குறிப்புச் சொற்கள்