சிங்கப்பூரில் குடும்பங்கள் பயன்படுத்தும் தண்ணீரின் அளவு சென்ற ஆண்டு அதிகரித்தது.
கடந்த 2024ஆம் ஆண்டு சராசரியாக ஒவ்வொரு சிங்கப்பூர்வாசியும் தினமும் 142 லிட்டர் அளவு தண்ணீரைப் பயன்படுத்தினர். இந்த அளவு, 2023ல் பதிவான 141 லிட்டரைவிட ஒரு லிட்டர் அதிகமாகும்.
கொவிட்-19 கொள்ளைநோய்ப் பரவல் காலத்தில் பதிவான புள்ளி விவரங்களுடன் ஒப்பிடுகையில் வீடுகளில் பயன்படுத்தப்படும் தண்ணீரின் அளவு தொடர்ந்து குறைவாக இருந்து வருகிறது. எனினும், 2030ஆம் ஆண்டுக்குள் ஒவ்வொருவரும் நாளுக்கு 130 லிட்டர் என்ற அளவில் தங்கள் தண்ணீர் பயன்பாட்டைக் குறைத்துக்கொள்ளும் இலக்கை அடைய இன்னும் முயற்சிகள் எடுக்கவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்ற ஆண்டின் தண்ணீர்ப் பயன்பாட்டுப் புள்ளி விவரங்களை தேசிய நீர் அமைப்பான பொதுப் பயனீட்டுக் கழகம் சனிக்கிழமை (மார்ச் 8) வெளியிட்டது. நமது தெம்பனிஸ் நடுவத்தில் நடைபெற்ற தண்ணீர் சேமிப்பு இயக்கத்துக்கான நிகழ்வில் புள்ளி விவரங்கள் வெளியிடப்பட்டன.
சனிக்கிழமை தொடங்கப்பட்ட தண்ணீர் சேமிப்பு இயக்கம், பொதுப் பயனீட்டுக் கழகம் ஆண்டுதோறும் நடத்திவரும் இயக்கமாகும்.
தண்ணீர்ப் பயன்பாடு ஒரு லிட்டர் அதிகரித்ததற்கு 2024ஆம் ஆண்டு, கூடுதல் வெப்பமான, அதிக வறட்சியான ஆண்டாக இருந்தது காரணமாக இருக்கலாம் என்று பொதுப் பயனீட்டுக் கழகம் சுட்டியது. 2024, 2019, 2016 ஆகிய ஆண்டுகள்தான் சிங்கப்பூர் வரலாற்றில் ஆக அதிக வெப்பம் பதிவான ஆண்டுகளாகும். இந்த ஆண்டுகளில் சராசரி வெப்பநிலை 28.4 டிகிரி செல்சியசை எட்டியது.
தண்ணீரைச் சேமிக்க குடும்பங்களுக்கு மேலும் உதவ, தேர்ந்தெடுக்கப்பட்ட ஓரறை, ஈரறை, மூவறை வீடுகளில் பழைய நீர் சேமிப்புக் கருவிகளை மாற்றி புதியவை பொருத்தப்படும். இந்நடவடிக்கை குறித்த மேல்விவரங்கள் பின்னர் வெளியிடப்படும் என்று பொதுப் பயனீட்டுக் கழகம் தெரிவித்தது.
இந்நடவடிக்கையைத் தனியார் துறை அமைப்புகளுடன் இணைந்து மேற்கொள்ள கழகம் எண்ணம் கொண்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூர்ப் பசுமைத் திட்டம் 2030ன்கீழ், நாளுக்கு ஒருவர் பயன்படுத்தும் நீரின் அளவை 130 லிட்டருக்குக் குறைப்பது இலக்கு. அந்த வகையில், அடுத்த ஐந்து ஆண்டுகளில் சிங்கப்பூர்வாசிகள் தங்களின் தினசரி தண்ணீர்ப் பயன்பாட்டைக் கிட்டத்தட்ட 12 லிட்டர் குறைத்துக்கொள்ளவேண்டும்.

