கிராஞ்சி விரைவுச்சாலை விபத்தில் ஒருவர் மரணம்

கிராஞ்சி விரைவுச்சாலை விபத்தில் ஒருவர் மரணம்

படம்: கிரிஸ்இங்கேஎச்/ டிக்டாக்

27 Oct 2026 - 3:28 pm

1 mins read

சிங்கப்பூரின் கிராஞ்சி விரைவுச்சாலையில் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 27) ஏற்பட்ட சாலை விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

உட்லண்ட்சிலிருந்து வெளியேறும் சாலையில் விபத்து நேர்ந்ததால் அங்குப் போக்குவரத்து மெதுவடைந்தது.

காலை கிட்டத்தட்ட 7.20 மணிக்கு விபத்து குறித்த தகவல் கிடைத்ததாகச் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. சம்பவ இடத்தில் விபத்துக்குள்ளானவர் மாண்டதை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

சமூக ஊடகத்தில் பதிவேற்றப்பட்ட படங்கள், காணொளிகளில் கனரக வாகனத்துக்கு அருகே காவல்துறையின் நீல நிறக் கூடாரம் ஒன்று காணப்பட்டது. மேலும், கனரக வாகனத்தின்கீழ் மோட்டார்சைக்கிள் ஒன்று கவிழ்ந்து கிடப்பதும் தெரிந்தது.

நிலப் போக்குவரத்து ஆணையத்தின் போக்குவரத்து அதிகாரிகளும் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை அதிகாரிகளும் சம்பவ இடத்தில் காணப்பட்டனர்.

சிங்கப்பூரில் சாலை விபத்துகளும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளதாகப் போக்குவரத்துக் காவல்துறையின் புள்ளிவிவரங்கள் சுட்டுகின்றன.

கடந்த ஆண்டின் முற்பாதியில் காயம் ஏற்படுத்திய சாலை விபத்துகளின் எண்ணிக்கை 3,748ஆக இருந்தது. இவ்வாண்டின் முற்பாதியில் அந்த எண்ணிக்கை 3,869க்குக் கூடியது.

கடந்த ஆண்டின் முற்பாதியில் சாலை விபத்துகளால் காயமடைந்தோர் எண்ணிக்கை 4,894ஆக இருந்தது. அது, இவ்வாண்டின் முற்பாதியில் 5,090க்கு அதிகரித்தது.

ஜனவரியிலிருந்து ஜூன் வரை ஏற்பட்ட சாலை விபத்துகளில் பாதிக்கும் அதிகமானவற்றில் மோட்டார்சைக்கிளோட்டிகளும் அவர்களுக்குப் பின்னால் அமர்ந்து பயணம் செய்தோரும் ஈடுபட்டிருந்தனர்.

குறிப்புச் சொற்கள்