தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சுகாதாரப் பராமரிப்பு நிலையங்களில் ‘கேபோட்’ பயன்படுத்தியதாக சந்தேகம்

2 mins read
bc5be359-b8c2-4779-92cc-da08e7d502f9
பறிமுதல் செய்யப்பட்ட மின்சிகரெட்டுகள். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கடந்த ஜூலை மாதம் ஒன்பதாம் தேதிக்கும் ஆகஸ்ட் மாதம் 18ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் கேபோட் மின்சிகரெட்டுகளைப் பயன்படுத்தியதாகச் சந்தேகிக்கப்படும் கிட்டத்தட்ட 50 சம்பவங்கள் இடம்பெற்றதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அந்தக் காலகட்டத்தில், தினமும் சராசரியாக கேபோட் மின்சிகரெட்டைப் பயன்படுத்தியதாகச் சந்தேகிக்கப்பட்ட குறைந்தது ஒருவர் சுகாதாரப் பராமரிப்பு நிலையங்களில் காணப்பட்டார்.

புதன்கிழமை (செப்டம்பர் 3) ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் கேள்விகளுக்கு அமைச்சு பதிலளித்தது. சந்தேகப் பேர்வழிகளின் தகவல்கள் மின்னணு மருத்துவத் தரவுகளில் பதிவாயின அல்லது சுகாதார அறிவியல் ஆணையத்திடம் தெரியப்படுத்தப்பட்டன. கேபோட் பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய பின்விளைவுகளுக்கு ஆளானதாகக் கூறப்படுவோரின் தகவல்கள் சுகாதார அறிவியில் ஆணையத்திடம் தெரிவிக்கப்பட்டன.

எட்டோமிடேட் போதை மருந்தை உட்கொள்ளும்போது ஏற்படக்கூடிய பின்விளைவுகளை அவை குறிக்கும். குழப்பத்துடன் இருப்பது, தலை சுற்றுவது, தெளிவற்ற பேச்சு உள்ளிட்டவை அத்தகைய பின்விளைவுகளில் அடங்கும்.

முன்பு மின்சிகரெட்டுகளைப் பயன்படுத்தியதைத் தாங்களே முன்வந்து தெரியப்படுத்தி மருத்துவ உதவி நாடுவோர்மீது அமலாக்க நடவடிக்கை எடுக்கப்படாது என்று சுகாதார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார். இவ்விவகாரங்களில் சேகரிக்கப்படும் தகவல்கள், மின்சிகரெட்டுகளில் எட்டோமிடேட் சேர்க்கப்படுவதன் தொடர்பிலான சட்டங்களை வரையப் பயன்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.

எட்டோமிடேட் சேர்க்கப்பட்டுள்ள மின்சிகரெட்டுகளைப் பயன்படுத்தியோர், பயன்படுத்தியதாகச் சந்தேகிக்கப்படுவோர் ஆகியோரின் தகவல்களைப் பதிவுசெய்துகொள்ளுமாறு சுகாதார அமைச்சும் சுகாதார அறிவியல் ஆணையமும் கடந்த ஜூலை மாதம் ஒன்பதாம் தேதி பொதுச் சுகாதார நிலையங்களிடம் அறிக்கை மூலம் கேட்டுக்கொண்டன. சென்ற ஆண்டிலிருந்து இவ்வாண்டு வரை எட்டோமிடேட் சேர்க்கப்பட்ட மின்சிகரெட்டுகளின் எண்ணிக்கை கவலை தரும் வகையில் அதிகரித்ததைத் தொடர்ந்து அவ்வாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.

எட்டோமிடேட் சேர்க்கப்படும் மின்சிகரெட்டுகள் கேபோட் என்றும் அழைக்கப்படும்.

தாங்கள் கவனிக்கும் நோயாளிகளை மின்சிகரெட்டுகளை ஒப்படைக்க வைக்குமாறும் அவர்களுக்கு சிறுநீர்ப் பரிசோதனை மேற்கொள்வது குறித்துப் பரிசீலிக்குமாறும் அந்த அறிக்கையில் மருத்துவ நிலையங்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மருத்துவ உதவி நாடுவோர்மூலம் மின்சிகரெட்டுகளில் எட்டோமிடேட் பயன்பாட்டின் அபாயத்தையும் அடிமைப்படுத்தும் அதன் தன்மையையும் அதிகாரிகள் ஆராய்ந்துவருவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து விதிமுறைகளை மாற்றவேண்டுமா அல்லது முடுக்கிவிடவேண்டுமா போன்றவை தொடர்பில் முடிவெடுக்க அத்தகைய ஆய்வுகள் உதவும்.

குறிப்புச் சொற்கள்