நாடாளுமன்றத்தில் மூன்றில் ஒரு பங்கு எதிர்க்கட்சிகள் வசம் இருக்கவேண்டும் என்றும் அதற்கான காரணங்களை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் பாட்டாளிக் கட்சியின் தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங், 48, தெரிவித்துள்ளார்.
விரைவில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் மக்களின் வாக்குகளை வென்று நாடாளுமன்றத்திற்குள் நுழையும் முனைப்பில் அரசியல் கட்சிகள் வாக்கு வேட்டையில் இறங்கியுள்ளன. அவ்வகையில் செங்காங் குழுத்தொகுதி வாக்காளர்களைச் சந்திக்கும் இலக்குடன் வியாழக்கிழமை (ஏப்ரல் 24) அவ்வட்டாரத்தில் தொகுதி உலா மேற்கொண்டது பாட்டாளிக் கட்சி.
அதன் பிறகு தொகுதி உலாவிற்குப் பிறகு செங்காங் ஸ்குவேர் வட்டாரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த திரு சிங், ‘‘தற்போதைய நிலவரப்படி நாடாளுமன்றத்தில் உள்ள ஆளுங்கட்சியினர் - எதிர்க்கட்சியினர் எண்ணிக்கையை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்,” என்றார்.
சிங்கப்பூரர்களின் அக்கறைக்குரிய அம்சங்கள் குறித்த கேள்விகளைப் பாட்டாளிக் கட்சி முன்வைத்த பெரும்பாலான தருணங்களில் அக்கேள்விகளுக்கான பதில் அரசாங்கத்தால் சட்டமாக, கொள்கைகளாக வடிவமைக்கப்பட்டதைக் குறிப்பிட்டு, தமிழ் முரசு எழுப்பிய கேள்விக்கு விளக்கமளித்தார் திரு சிங்.
“சமநிலையுடன்கூடிய நாடாளுமன்றம் என்று குறிப்பிடும்போது அது எண்ணிக்கையைப் பொருத்தது.அங்குள்ள மொத்த இடங்களில் குறைந்தது மூன்றில் ஒரு பங்கு எதிர்க்கட்சிகளிடம் இருக்க வேண்டும். மக்கள் நலன் சார்ந்து, அவர்களின் குரல் செவிமடுக்கப்படுவதற்கு அந்தப் பிரதிநிதித்துவம் முக்கியம். அதன் முக்கியத்துவத்தை மக்கள் உணரவேண்டும்,” என்றார் திரு சிங்.
மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் முறை அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் 2016ஐச் சுட்டிய சிங், அதன் தொடர்பில் ஏகப்பட்ட வருத்தங்கள் நிலவியதாகவும், இதுபோன்ற சூழல்களில்தான் சமநிலையான நாடாளுமன்றம் ஏன் வேண்டும் என்பதை மக்கள் உணர்ந்திட வேண்டும் என்றும் அவர் சொன்னார்.
“அரசியல் சாசனம் உள்ளிட்ட முக்கியச் சட்டங்களைத் திருத்தும் வேளையில், மக்களின் குரல் நாடாளுமன்றத்தில் எதிரொலிப்பதை உறுதிசெய்வதற்கு எதிர்க்கட்சிகளுக்கு மேற்கூறிய அளவிலான இடங்கள் வேண்டும் என்றார்,” திரு சிங்.
அதே கேள்விக்குப் பதிலளித்த அக்கட்சியின் செங்காங் குழுத்தொகுதி வேட்பாளரான திரு ஜேமஸ் லிம், “எங்களால் முன்மொழியப்பட்டாலும் சரி, வேறு எவரேனும் அக்கருத்துகளை முன்வைத்தாலும் சரி, இறுதியில் அந்தக் கொள்கை நிறைவேறினால், சிங்கப்பூரர்களுக்குப் பயனளிப்பதாகத் திகழும்,” என்றார்.
தொடர்புடைய செய்திகள்
இதற்கிடையே மரின் பரேட்-பிரேடல் ஹைட்ஸ் குழுத்தொகுதியில் போட்டியிடாமல் மக்கள் செயல் கட்சியின் வெற்றிக்கு வித்திட்ட விவகாரத்தில் நிலவும் இதர எதிர்க்கட்சியினரின் அதிருப்தி குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குத் தம் கட்சியின் முடிவைத் தற்காத்துப் பேசினார் திரு சிங்.
எதிர்க்கட்சியினர் இம்முடிவுக்கு ஆதரவு தெரிவிக்காதபோதும், ‘‘கட்சியின் தேர்தல் திட்டமிடல் தொடர்பில் அம்முடிவைப் பொருத்தமற்றதாகக் கருதவில்லை,’’என்றார் திரு சிங்.