சின் மிங் அவென்யூவில் உள்ள ஷெங் சியோங் பேரங்காடியில் 12 முறை மளிகைப் பொருள்களைத் திருடியவருக்கு நீதிமன்றம் வியாழக்கிழமை (அக்டோபர் 8) ஒரு வாரச் சிறைத்தண்டனை விதித்தது.
உடற்பயிற்சிப் பயிற்சியாளரான லியோங் சீக் யுயன், 2025 மே முதல் ஆகஸ்ட் வரை சின் மிங் அவென்யூ ஷெங் சியோங் பேரங்காடிக்குச் சென்று மளிகைப் பொருள்களைத் திருடிய குற்றத்தை முன்னதாக நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.
ஒவ்வொரு முறையும் தானியங்கிக் கட்டண இயந்திரத்துக்குச் சென்ற 45 வயது லியோங் சில பொருள்களை மட்டும் வருடி கட்டணம் செலுத்தினார். ஆனால், சில பொருள்களை இயந்திரத்தில் வருடாமல், கட்டணம் செலுத்தியவற்றுடன் சேர்த்து எடுத்துச்செல்வதை அவர் வழக்கமாகக் கொண்டிருந்தார்.
2025 செப்டம்பர் 29ஆம் தேதி, கடை உதவி மேற்பார்வையாளர் பொருள்களைச் சரிபார்த்தபோது சில பொருள்கள் குறைந்திருப்பதைக் கண்டறிந்தார். கண்காணிப்புப் படக்கருவிப் பதிவுகளை ஆய்வு செய்த அவர், லியோங்கை அடையாளம் கண்டார்.
2025 அக்டோபர் 1ஆம் தேதி லியோங் மீண்டும் கடைக்கு வந்தபோது, அங்கிருந்த முக அடையாளத்தைக் கண்டறியும் தொழில்நுட்பம் அவருக்கு எச்சரிக்கைத் தகவலை அனுப்பியது. உடனே காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு லியோங் கைதுசெய்யப்பட்டார்.
லியோங் ஒருவகை மனச்சோர்வால் பாதிக்கப்பட்டிருந்ததாகக் கூறிய அவருடைய வழக்கறிஞர், திருடப்பட்ட பொருள்களுக்கான முழுத் தொகையையும் அவர் திருப்பிச் செலுத்திவிட்டதாகக் கூறினார்.
ஷெங் சியோங் நிறுவனம் 2024 ஏப்ரல் முதல் தனது பேரங்காடிகளில் முக அடையாளத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வருகிறது.
