விமானத்துறை வேலைவாய்ப்புச் சந்தை (ஒன்ஏவியேஷன்) இரண்டாவது முறையாக இவ்வாரம் நடைபெறவிருப்பதாக சிங்கப்பூர் பொது விமானப் போக்குவரத்து ஆணையம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
வேலைகளுக்கு ஆள்சேர்க்க நேரடியாக நேர்காணல்கள் நடத்தப்படும் என்றும் ஆணையம் குறிப்பிட்டது.
ஆகஸ்ட் 4, 5 தேதிகளில் சன்டெக் சிட்டி மாநாட்டு மையத்தில் நடைபெறவிருக்கும் இந்த வேலைவாய்ப்புச் சந்தையில் சுமார் 40 நிறுவனங்கள் பங்குபெறுகின்றன. சென்ற ஆண்டின் சந்தையில் பங்கெடுத்த 21 நிறுவனங்களைவிட இது கிட்டத்தட்ட இருமடங்கு அதிகம்.
விமானத்துறையின் முக்கிய பிரிவுகளான விமான நிலையம், விமானச்சேவை, அரசாங்கம், விமானச் சரக்கு, விமானத்துறை கல்வி, விண்வெளித்துறை, விமானப் போக்குவரத்து நிர்வாகம், ஆளில்லா வானூர்திகள் போன்றவை வேலைவாய்ப்புச் சந்தையில் இடம்பெறுவதாக ஆணையத்தின் அறிக்கை தெரிவித்தது.
ஏர்பஸ், சாங்கி விமான நிலையக் குழுமம், குடிநுழைவு, சோதனைச்சாவடிகள் ஆணையம், ஜெட்ஸ்டார், லாட்டே டிராவல் ரீட்டெய்ல், ரோல்ஸ்-ரோய்ஸ் சிங்கப்பூர், எஸ்டி இன்ஜீனியரிங் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் நேரடி நேர்காணல்கள் நடத்தவிருக்கின்றன. ஆர்வமுள்ளவர்கள் முன்பதிவு செய்யலாம்.
இந்த ஆண்டின் வேலைவாய்ப்புச் சந்தையில், விமானத்துறை கல்விப் பிரிவு அறிமுகமாகிறது. மாணவர்களும் வேலை செய்வோரும் விமானத்துறை கல்வித் திட்டங்கள் பற்றியும் திறன் மேம்பாடு பற்றியும் தெரிந்துகொள்ளலாம்.
ஆள்சேர்க்கும் நிறுவனங்களும் விமானத்துறை வல்லுநர்களும் நடத்தும் உரைகளிலும் வருகையாளர்கள் கலந்துகொள்ளலாம்.
“கொவிட்-19 பெருந்தொற்றின் மிகவும் இக்கட்டான ஈராண்டுகளுக்குப் பிறகு விமானத்துறையில் மீண்டும் ஆர்வத்தைத் தூண்டுவதற்காகச் சென்ற ஆண்டு முதல்முறையாக விமானத்துறை வேலைவாய்ப்புச் சந்தைக்கு ஏற்பாடு செய்தோம். அந்நிகழ்ச்சி 11,000க்கும் மேற்பட்ட விமானத்துறை ஆர்வலர்களையும் வேலை தேடுவோரையும் ஈர்த்தது,” என்று ஆணையத்தின் தலைமை இயக்குநர் ஹான் கொக் ஜுவான் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
தொடர்புடைய செய்திகள்
இந்த வேலைவாய்ப்புச் சந்தைக்கு தேசிய தொழிற்சங்கக் காங்கிரஸ், வேலை நியமன, வேலைத்தகுதி கழகம், சிங்கப்பூர் ஊழியர் அணி அமைப்பு ஆகியவற்றுடன் சேர்ந்து ஆணையம் ஏற்பாடு செய்கிறது.

