ஓங் பெங் செங்கின் நிறுவனம் ஜப்பானில் முதல் ஃபோர் சீசன்ஸ் ஹோட்டலைத் திறந்தது

1 mins read
307e7366-33dd-448f-b35d-d93c084b849e
ஒசாகா நகரின் வணிக மாவட்டத்திற்கு அருகிலிருக்கும் பிரபலமான டோஜிமா வட்டாரத்தில் உள்ள ஒன் டோஜிமா கட்டடத்தில் அமைந்திருக்கும் ஃபோர் சீசன்ஸ் ஹோட்டல். - படம்: ஹோட்டல் புராபர்டீஸ் லிமிடெட் (எச்பிஎல்)

சொத்து, ஹோட்டல் மேம்பாட்டாளரான சிங்கப்பூரின் செல்வந்தர் ஓங் பெங் செங்கிற்குச் சொந்தமான ஹோட்டல் புராபர்டீஸ் லிமிடெட் (எச்பிஎல்) ஆகஸ்ட் 1ஆம் தேதி ஜப்பான், ஒசாகாவில் ஃபோர் சீசன்ஸ் ஹோட்டலை அதிகாரபூர்வமாகத் திறந்தது.

ஃபோர் சீசன்ஸ் ஹோட்டல் ஒசாகா, ஹெச்பிஎல்-இன் 15வது ஃபோர் சீசன்ஸ் சொத்தாகும். இதன் மூலம் ஹெச்பிஎல், உலகின் ஃபோர் சீசன்ஸ் ஹோட்டல்களின் மிகப்பெரிய உரிமையாளராகி உள்ளது.

புதிய ஹோட்டல் ஒசாகா நகரின் வணிக மாவட்டத்திற்கு அருகிலிருக்கும் பிரபலமான டோஜிமா வட்டாரத்தில் உள்ள ஒன் டோஜிமா கட்டடத்தில் அமைந்துள்ளது.

மே மாதத்தில் கட்டி முடிக்கப்பட்ட ஒன் டோஜிமா திட்டம், 49 மாடிகளைக் கொண்ட அதிநவீன பல பயன்பாட்டுக் கட்டடமாகும்.

28 முதல் 37வது வரையிலான தளங்களில் ஹோட்டல் அமைந்துள்ளது. 175 அறைகள், ‘ஸ்பா’, உள்ளரங்க நீச்சல்குளம், 24/7 உடற்பயிற்சிக் கூடம் போன்ற கூடுதல் ஆடம்பரங்களைக் கொண்டுள்ளது.

ஒசாகாவில் உள்ள ஃபோர் சீசன்ஸ் ஹோட்டல் இந்த ஆண்டு திறக்கப்பட்ட இரண்டாவது எச்பிஎல் ஹோட்டல் சொத்தாகும். ஆகஸ்ட் மாதத்தில் எச்பிஎல் மலேசியா, ஜோகூருக்கு அருகே புலாவ் தியோமான் படகு இல்லத்தை அறிமுகப்படுத்தியது.

சிங்கப்பூர் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட எச்பிஎல், ஆசியா பசிபிக்கில் மேலும் 11 ஹோட்டல் சொத்துகளை நிர்வகிக்கிறது.

ஃபோரம் தி ஷாப்பிங் மால், வோகோ ஆர்ச்சர்ட் சிங்கப்பூர் ஹோட்டல், ஆர்ச்சர்ட் ரோட்டிலுள்ள எச்பிஎல் ஹவுஸ் ஆகியவற்றை மறுமேம்பாடு செய்வதற்கான அனுமதியையும் பெற்றுள்ளது.

குறிப்புச் சொற்கள்