பெருஞ்செல்வந்தர் ஓங் பெங் செங்கின் எச்பிஎல் (Hotel Properties Limited) நிறுவனம் அதன் பங்கு விற்பனையை நிறுத்தி வைத்துள்ளது.
திரு ஓங் பெங் செங் வெள்ளிக்கிழமையன்று (அக்டோபர் 4) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவிருப்பதை முன்னிட்டு ஹோட்டல், சொத்து மேம்பாட்டு நிறுவனமான எச்பிஎல் அதன் பங்கு விற்பனையை நிறுத்தியுள்ளது.வெள்ளிக்கிழமை காலை 7.45 மணியளவில் அந்நிறுவனத்தின் செயலாளர் சிங்கப்பூர் பங்குச் சந்தையில் அந்த அறிவிப்பை வெளியிட்டார்.
சட்டப் பிரிவு 165ன்கீழ் 78 வயது ஓங், இரு குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குவார் என்று தெரிவிக்கப்பட்டது. அக்குற்றச்சாட்டுகள், அரசாங்க ஊழியரை அன்பளிப்பு பெறத் தூண்டியது, நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதற்கு இடையூறு விளைவிப்பது ஆகியவற்றின் தொடர்பிலானவை.
வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
திரு ஓங்கிடமிருந்து விலையுயர்ந்த அன்பளிப்புகளைப் பெற்றது உள்ளிட்ட குற்றங்களுக்காக முன்னாள் போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரனுக்கு வியாழக்கிழமையன்று (அக்டோபர் 3) 12 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை திரு ஓங் மீது குற்றச்சாட்டு சுமத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.