ரமலானை முன்னிட்டு இணையத்தில் வலம்வரும் விளம்பரம் ஒன்றுக்கு எதிராக முயிஸ் எனப்படும் சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
முஸ்லிம்களுக்கு ஜகாத் உதவித்தொகையாக 1,000 வெள்ளி வழங்கப்படும் என்று குறிப்பிடும் அந்த விளம்பரம் போலியானது என்று முயிஸ் தெரிவித்துள்ளது.
விண்ணப்பப் படிவம் ஒன்றை நிரப்புவதாக அந்த போலி விளம்பரம் அமைந்துள்ளதை முயிஸ் பகிர்ந்துகொண்ட ஒரு படத்தில் காண முடிந்தது. ஒருவர் தமது முழுப் பெயரையும் தொடர்பு எண்ணையும் அதில் உள்ளீடு செய்தால் முயிஸ் ஜகாத் உதவித்தொகைத் திட்டம் வழி பணம் கோரலாம் என்று விளம்பரம் அமைந்துள்ளது.
மன்றத்தின் ஓர் அங்கமாக விளங்கும் ‘ஜகாத் சிங்கப்பூர்’, சிங்கப்பூரின் ஸகாத் நிதி நிர்வாகத்தைப் பார்த்துக்கொள்கிறது. அதன் சின்னமும் இந்த போலி விளம்பரத்தில் இருப்பதாக அறியப்படுகிறது.
ஜகாத் உதவித்தொகையை இணையம் வழி முயிஸ் ஏற்றுக்கொள்வதில்லை என்று ஃபேஸ்புக் பதிவு ஒன்றில் குறிப்பிட்ட முயிஸ், இது ஒரு மோசடி என்று தெரிவித்தது.
இத்தகைய உதவித்தொகை கோருவதற்கு ஒருவர் நேரடியாகச் சமூக மேம்பாட்டு பள்ளிவாசல்களுக்குச் சென்று ஒரு சமூக மேம்பாட்டு அதிகாரியின் உதவியுடன் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று முயிஸ் அறிவுறுத்தியது.
போலி விளம்பரத்தை மற்றவர்களுக்கு அனுப்ப வேண்டாம் என்று வலியுறுத்திய முயிஸ், அது குறித்து உடனே info@muis.gov.sg மின்னஞ்சல் முகவரிக்குத் தெரியப்படுத்துமாறு குறிப்பிட்டது.

