புதுப்பிக்கப்பட்ட ‘சப்போர்ட் ஃபார் யூ’ இணையக் கணிப்பான்மூலம் சிங்கப்பூரர்கள் அரசாங்கத்திடமிருந்து பெறக்கூடிய அனுகூலங்களை மதிப்பிட்டு அறிந்துகொள்ளலாம்.
இவ்வாண்டின் வரவுசெலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய ஆதரவுத் திட்டங்கள் தொடர்பில் தங்களுக்குக் கிடைக்கக்கூடிய வழங்குதொகை, சலுகைகள் குறித்து அறிந்திட இந்தத் தளம் உதவுகிறது.
சிங்கப்பூரில் வசிக்கும் சிங்கப்பூர் குடிமக்கள் பயன்படுத்துவதற்காக இந்தக் கணிப்பான் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்த, வயது, வரி மதிப்பீட்டுக்குரிய வருமானம், மத்திய சேம நிதி மெடிசேவ் இருப்புத் தொகை, குழந்தைகளின் எண்ணிக்கை, வீட்டு வகை, வீடுகளின் எண்ணிக்கை, வீட்டின் ஆண்டு மதிப்பு முதலிய முக்கியத் தகவல்களைக் கணிப்பானில் உள்ளீடு செய்ய வேண்டும்.
அதே முகவரியில் வசிக்கும் குடும்பத்தினரின் தகவல்களை ஒருவர் கணிப்பானில் உள்ளீடு செய்தால், அனைவரும் பெறக்கூடிய மொத்த பலன்களை ஒரே இணையப்பக்கத்தில் அறிந்துகொள்ளலாம்.
ஒருவரது 2024ஆம் ஆண்டுக்கான வீடு அல்லது வீடுகளின் ஆண்டு மதிப்பு அடிப்படையில், இவ்வாண்டு வழங்கப்படும் அனுகூலங்களுக்கான அவர்களின் தகுதி மதிப்பீடு செய்யப்படும்.
சிங்கப்பூரர்கள் https://supportgowhere.life.gov.sg/budget/support-calculator என்ற இணைய முகவரியில் கணிப்பானைப் பயன்படுத்தலாம்.