ஈசூனில் காட்டுக் கோழிகளைத் துரத்திப் பிடித்ததால் இணையத்தில் விவாதம்

ஈசூனில் காட்டுக் கோழிகளைத் துரத்திப் பிடித்ததால் இணையத்தில் விவாதம்

1 mins read
c3a4bf11-fa43-40db-bd8e-6532c077cfc4
ஈசூனில் சுற்றித் திரிந்த காட்டுக் கோழிகள் ஒருவழியாகப் பிடிக்கப்பட்டதாக அறியப்படுகிறது. - காணொளிப் படம்: ஃபேஸ்புக்

நீண்ட கைப்பிடிகளைக் கொண்ட வலைகளைப் பயன்படுத்தி ஆடவர் நால்வர் காட்டுக் கோழிகளைப் பிடிக்க முற்படுவதைக் காட்டும் காணொளி இணையத்தில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

நாளுக்கு நாள் அதிகரித்துவரும் காட்டுக் கோழித் தொல்லைக்கு முற்றுப்புள்ளி வைக்க எடுக்கப்படும் இத்தகைய முயற்சிகளைச் சில குடியிருப்பாளர்கள் வரவேற்றுள்ளபோதிலும் மற்ற சிலர் அவை மனிதாபிமான முறையில்தான் பிடிக்கப்படுகின்றனவா என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஃபேஸ்புக்கில் புதன்கிழமை (ஜூலை 15) வெளியிடப்பட்டகாணொளி, ஈசூனில் உள்ள ஒரு குடியிருப்புப் பேட்டையில் எடுக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. இறுதியில் காட்டுக் கோழிகள் வெற்றிகரமாகப் பிடிக்கப்பட்டதாக அறியப்படுகிறது. காணொளி இணையவாசிகளிடமிருந்து மாறுபட்ட கருத்துகளைப் பெற்றுள்ளது.

இதுகுறித்து ஏஷியாஒன் செய்தித் தளத்தின் கேள்விகளுக்குப் பதிலளித்த அந்த வட்டாரத்தை நிர்வகிக்கும் நீ சூன் நகர மன்றம், குடியிருப்புப் பேட்டைகளில் காட்டுக் கோழிகள் சுற்றித் திரிவது குறித்தும், குறிப்பாக, அதிகாலையில் அவை கூவுவதால் அக்கம்பக்கத்தில் அமைதியும் நிம்மதியும் பாதிக்கப்படுவது குறித்தும் சில குடியிருப்பாளர்கள் கவலை தெரிவித்துள்ளதை தான் அறிவதாகக் கூறியது.

இதைத் தான் கவனத்தில் கொண்டுள்ளதாகவும் காட்டுக் கோழிகள் விளைவிக்கும் தொந்தரவைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, தேவைப்படும் இடங்களில் அவற்றின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த அவ்வப்போது குறிப்பிட்ட கால இடைவெளியில் தகுந்த நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் நகர மன்றம் விளக்கியது.

அதே வேளையில், வனவிலங்குகளும் மக்கள் வாழும் சூழலின் ஒரு பகுதி என்பதைத் தான் ஏற்றுக்கொள்வதாகவும் இப்பிரச்சினையை ஒரு பொறுப்பான, சமநிலையான முறையில் கையாள்வதில் தான் உறுதியாக இருப்பதாகவும் நகர மன்றம் குறிப்பிட்டது.

குறிப்புச் சொற்கள்