ஃபுலர்ட்டன் ஹெல்த் சேமிப்பகத்தில் இணைய ஊடுருவல்; வெளிநாட்டு ஊழியர்களின் விவரங்கள் பாதிப்பு

ஃபுலர்ட்டன் ஹெல்த் சேமிப்பகத்தில் இணைய ஊடுருவல்; வெளிநாட்டு ஊழியர்களின் விவரங்கள் பாதிப்பு

கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

11 Nov 2026 - 2:48 pm

2 mins read

மனிதவள அமைச்சின்கீழ் வெளிநாட்டு ஊழியர்களுக்கான முதன்மைப் பராமரிப்புத் திட்டத்திற்குப் பயன்படும் ‘ஃபுலர்ட்டன் ஹெல்த்’ நிறுவனத்தின் தகவல் சேமிப்பகம் (server) ஊடுருவப்பட்டுள்ளது.

அந்த இணையத் தாக்குதலில் வெளிநாட்டு ஊழியர்களின் பெயர், வேலை அனுமதிச்சீட்டு எண், பிறந்த தேதி, தொலைபேசி எண், மின்னஞ்சல், வசிப்பிட முகவரி ஆகியவை பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

எனினும், ஊழியர்களின் மருத்துவக் குறிப்புகளோ, நிதி விவரங்களோ பாதிக்கப்படவில்லை என்று அந்நிறுவனம் தனது இணையப்பக்கத்தில் திங்கட்கிழமை (நவம்பர் 9) வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்தது.

கடந்த அக்டோபர் 31ஆம் தேதி அந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது. அது வெளிநாட்டு ஊழியர் பராமரிப்புத் திட்டத்திற்கான தனிப்பட்ட ஒரு கட்டமைப்புடன் மட்டுமே தொடர்புடையது என்றும் ஏனைய சேவைகளுக்கான தகவல் தளங்கள் பாதிக்கப்படவில்லை என்றும் நிறுவனம் கூறியுள்ளது.

ஊடுருவல் பற்றி அறிந்ததும் பாதுகாப்பு நெறிமுறைகள் முடுக்கிவிடப்பட்டு கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. நிறுவனத்தின் மருத்துவ மையங்களும் சேவைகளும் வழக்கம்போல் தொடர்ந்து இயங்கி வருகின்றன.

இது தொடர்பாக தனிநபர் தகவல் பாதுகாப்பு ஆணையம், மனிதவள அமைச்சு, காவல்துறை ஆகியவற்றிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்குத் தகவல் தெரிவித்து, அவர்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ளத் தேவையான வழிகாட்டுதல்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அண்மைக்காலமாகச் சிங்கப்பூரில் இணையத் தாக்குதல்கள் தொடர்ந்து பதிவாகி வருகின்றன. நவம்பர் 6ஆம் தேதி எம்1 (M1) தொலைத்தொடர்பு நிறுவனம், ‘டாக்டர் எனிவேர்’ (Doctor Anywhere) தளம் ஆகியவற்றிலும் வாடிக்கையாளர்களின் தகவல்கள் கசிந்தன.

‘அமதியஸ்’ மென்பொருள் ஊடுருவலுக்குள்ளானதால் சிங்கப்பூர் ஏர்லைன்சின் ஏறக்குறைய 46,000 முன்பதிவு விவரங்கள் ஊடுருவப்பட்டன. எஸ்பிஎச் மீடியா (SPH Media) நிறுவனத்தின் ஐந்து தளங்களும், சாட்ஸ் (SATS) நிறுவனத்தின் பள்ளி உணவு முன்பதிவுச் செயலியான ‘டாப்பீ’யும் (Tappee) அண்மையில் இணையத் தாக்குதலுக்குள்ளானது. அச்சம்பவங்கள் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்