சிங்கப்பூரில் பள்ளி மாணவர்களுக்கான உணவு முன்பதிவுச் செயலி ஒன்றில் இணைய ஊடுருவல் நடந்துள்ளது.
அதில் மாணவர்களின் பெயர்கள், சலுகை அட்டை எண்கள் போன்ற தனிப்பட்ட விவரங்கள் கசிந்துள்ளன.
உணவுச் சேவை வழங்கும் நிறுவனமான ‘சாட்ஸ்’ மேற்குறிப்பிட்ட தகவல்களைச் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 10) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
‘டாப்பீ’ எனும் அந்தச் செயலி 2023ஆம் ஆண்டு ஜனவரியில் தொடங்கப்பட்டது. சிங்கப்பூரிலுள்ள நான்கு பள்ளிகளில் அச்செயலி பயன்பாட்டில் உள்ளது.
பாதிக்கப்பட்ட மாணவர்களின் தனிப்பட்ட விவரங்களைக் காக்கும் பொருட்டுப் பள்ளிகளின் பெயர்களை வெளியிட ‘சாட்ஸ்’ மறுத்துவிட்டது.
‘சீரியல் மல்டிவிஷன்’ எனும் தொழில்நுட்ப நிறுவனம் அச்செயலியை உருவாக்கிப் பராமரித்து வருகிறது.
‘டாப்பீ’ செயலியில் இருந்த குறைபாட்டைப் பயன்படுத்தி அடையாளம் தெரியாத தரப்பு அத்துமீறி நுழைந்ததை ‘சாட்ஸ்’ கண்டறிந்தது. உடனே அச்செயலிக்கான அணுகல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
மாணவர்களின் மின்னஞ்சல் முகவரிகள், சில பெற்றோரின் மின்னஞ்சல்கள், சிலரின் உடல் அளவு, ஒவ்வாமை குறித்த விவரங்கள் ஆகியவை கசிந்துள்ளன.
ஆயினும், வங்கி, கடன் அட்டை விவரங்கள் எதுவும் கசியவில்லை. தமது தகவல் தொழில்நுட்பக் கட்டமைப்பு பாதிக்கப்படவில்லை என சாட்ஸ் உறுதியளித்தது.
பள்ளிகள் மூலமாக உணவு வழங்கும் சேவை தடையின்றித் தொடர்கிறது. இணைய ஊடுருவல் சம்பவத்திற்கு அந்நிறுவனம் மன்னிப்புக் கோரியது.
தனிநபர் தகவல் பாதுகாப்பு ஆணையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் அதிகாரிகளின் விசாரணைக்குத் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும் அது கூறியது.
