விருப்பமற்ற பாலியல் உறவு குறித்த பதிவுகள், சுய துன்புறுத்தல், தொல்லை கொடுத்தல் போன்ற ஆபத்தான நடத்தைகளை ஊக்குவிப்பது முதலியவற்றை இணையத்தில் மிகுந்த துன்பம் கொடுக்கக்கூடிய நடத்தைகளாகச் சிங்கப்பூரர்கள் தரவரிசைப்படுத்தியுள்ளனர்.
ஆக அதிகத் துன்பத்தைத் தரக்கூடிய 16 நடத்தைகளின் பட்டியலில் அவையும் குறிப்பிடப்பட்டிருந்தன. கொள்கை ஆய்வுக் கழகம் புதன்கிழமை (அக்டோபர் 22) வெளியிட்ட ஆய்வில் பட்டியல் இடம்பெற்றிருந்தது.
இணையப் பகடிவதை, போலியான நபருடன் உறவுகொள்ளத் தூண்டும் மோசடி போன்றவற்றை 35 வயதுக்குட்பட்டோர் சாதாரணமாகக் கருதுவதும் ஆய்வில் தெரியவந்தது. பொதுமக்களிடையே விழிப்புணர்வு இன்னும் தேவைப்படுவதையே அது காட்டுவதாக ஆய்வாளர்கள் கூறினர்.
சென்ற ஆண்டு (2024) ஜூனில் தொடங்கப்பட்ட ஆய்வு இவ்வாண்டு மே மாதம் வரை நீடித்தது. ஆய்வில் 600 சிங்கப்பூரர்களும் நிரந்தரவாசிகளும் பங்கெடுத்தனர். சட்டங்களையும் சமூக ஊடக விதிமுறைகளையும் பற்றிய எண்ணங்கள், கலந்துரையாடலில் திரட்டப்பட்ட கருத்துகள், பாதிக்கப்பட்டோருடனும் ஆதரவாளர்களுடனும் மேற்கொள்ளப்பட்ட விரிவான நேர்காணல்கள் முதலியவை அதில் இடம்பெற்றுள்ளன.
தகவல் மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு, ஆய்வுக்கு நிதியாதரவு வழங்கியிருந்தது. சிங்கப்பூரர்கள், பல்வேறு துன்புறுத்தல்களின் கடுமையை எவ்வாறு பார்க்கின்றனர் என்பதையும் தற்போதுள்ள சட்டங்கள், சமூக ஊடகக் கொள்கைகள், பொது விழிப்புணர்வு முயற்சிகள் முதலியவற்றைப் பற்றி என்ன கருதுகின்றனர் என்பதையும் ஆய்வு ஆராய்ந்தது.
குழந்தைப் பாலியல் முறைகேடுகள், வன்முறை அல்லது பயங்கரவாதம் தொடர்பான உள்ளடக்கம், ஒழுக்கமற்ற நடவடிக்கைகளுக்கும் திட்டமிட்ட குற்றங்களுக்கும் ஆதரவளிக்கின்ற உள்ளடக்கம் முதலியவை ஆகக் கடுமையான இணையத் துன்புறுத்தலாக வகைப்படுத்தப்பட்டன.
ஆய்வில் பங்கெடுத்தோரிடம் 12 கேள்வித் தொகுப்புகள் தரப்பட்டன. ஒவ்வொரு கேள்வியிலும் நான்கு துன்புறுத்தல்கள் மற்றிய கேள்விகள் கொடுக்கப்பட்டிருந்தன. அவற்றில் ஆகக் கடுமையானதையும் மிகக் குறைந்த கடுமையானதையும் பங்கேற்பாளர்கள் குறிப்பிடவேண்டும்.
விருப்பமற்ற பாலியல் உறவுகளை ஒளிப்பதிவு செய்வதை அனைத்து வயதுப் பிரிவினரும் இரு பாலரும் ஒருமனதாக ஆகக் கடுமையான இணையத் துன்புறுத்தலாய்க் குறிப்பிட்டிருந்தனர்.


