இவ்வாண்டு தீமிதித் திருவிழா நவம்பர் 1ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.
சவுத் பிரிட்ஜ் ரோடு ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் நடைபெறும் தீமிதித் திருவிழாவிலும் அது தொடர்பான சடங்குகளிலும் வழிபாடுகளிலும் பங்கேற்க விரும்பும் பக்தர்கள் செப்டம்பர் 24ஆம் தேதியிலிருந்து இணையம் வழியாகப் பதிவுசெய்யலாம்.
பால்குடம், அங்கப்பிரதட்சணம், கும்பிடுதண்டம் ஆகிய வழிபாடுகளில் பங்கேற்கவும், பூக்குழி இறங்குவதற்கும் அல்லது பூக்குழியைச் சுற்றி வருவதற்கும் விரும்பும் பக்தர்கள் https://heb.org.sg என்ற இணையத்தளம் வழியாகப் பதிவுசெய்ய வேண்டும் என்று இந்து அறக்கட்டளை வாரியம் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 6) ஓர் அறிக்கை வழியாகத் தெரிவித்துள்ளது.
அவற்றுக்காக ஸ்ரீ மாரியம்மன் கோவிலுக்குச் சென்று நேரடியாகப் பதிந்துகொள்ள இயலாது. இந்த மூன்று மாதகாலத் திருவிழா ஆகஸ்ட் 17ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கவிருக்கிறது. நவம்பர் 1ஆம் தேதி தீமிதிக்கும் ஆண் பக்தர்கள் சிராங்கூன் ரோடு ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோவிலில் தொடங்கி பாதயாத்திரையாக ஸ்ரீ மாரியம்மன் கோவிலைச் சென்றடைவர்.
இணையப் பதிவு தொடங்கியவுடன் பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்ற விரும்பும் நேரத்தை முன்கூட்டியே பதிவுசெய்துகொள்ளுமாறு வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.
மேல்விவரங்களுக்கு 6223 4064 என்ற எண்ணில் கோவில் அலுவலகத்தைத் தொடர்புகொள்ளலாம். அல்லது வாரியத்தின் இணையத்தளம் வழியாகவும் facebook.com/hinduendowmentsboard என்ற ஃபேஸ்புக் பக்கம் வழியாகவும் விவரங்களை அறிந்துகொள்ளலாம்.


