தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூரில் தங்களைச் சந்தைப்படுத்த தானியக்க இயந்திரத்தை நாடும் இணைய சில்லறை வர்த்தக நிறுவனங்கள்

2 mins read
9ec779d1-a82e-42d7-9331-c59a39a2262b
இணைய சில்லறை வர்த்தக நிறுவனமான ‘பிட்ஸ்டாப் டிடெயில்ஸ்’ நிறுவனத்திற்குச் சிங்கப்பூர் முழுவதும் வாகனப் பராமரிப்புப் பொருள்களை விற்பனை செய்யும் ஐந்து தானியக்க இயந்திரங்கள் உள்ளன. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இணைய வர்த்தக நிறுவனங்கள் அதன் பொருள்களின் விற்பனையை அதிகரிக்கத் தானியக்க இயந்திரத்தை நாடும் நிலை உருவாகி வருகிறது.

சிங்கப்பூரில் தங்களைச் சந்தைப்படுத்த இம்முறை உதவுவதாகச் சில சில்லறை வர்த்தக நிறுவனங்களின் இயக்குநர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆண்களுக்கான சிகை அலங்காரப் பொருள்களை விற்பனைச் செய்யும் தமது முதல் கடையை எங்குத் திறக்கலாம் எனத் திரு ஆல்வின் லிம் சிந்தித்தபோது, சிங்கப்பூரில் வெவ்வேறு இடங்களில் இருக்கும் தனது 14 தானியக்க இயந்திரங்களின் விற்பனைத் தரவுகளை ஒப்பிட்டுப் பார்க்க அவர் முடிவு செய்தார். இதன்மூலம், சிறந்த முடிவை எடுக்க முடியும் என அவர் எண்ணினார்.

திரு லிம், தமது முதல் இணைய வர்த்தக நிறுவனமான எஸ்ஜிபோமேட்சின் (SGPomades) முதல் கடையை 2022ஆம் ஆண்டு தெம்பனிஸ் 1 கடைத்தொகுதியில் திறந்தார்.

அந்த இடத்தில் நிறுவப்பட்ட அவருடைய நிறுவனத்தின் தானியக்க இயந்திரம் மூலம் கிடைத்த வருவாய் மற்ற இடங்களில் இருக்கும் இயந்திரத்தின் விற்பனை வருவாயை விட 50 விழுக்காடு அதிகம்.

கடந்த ஜனவரி மாதம், முகம், தலைமுடிக்கான சிகை அலங்காரப் பொருள்களை விற்பனைச் செய்யும் தமது இரண்டாவது கடையை ஜூரோங் பாயிண்ட்டில் திரு லிம் திறந்தார்.

தமது பொருள்களைப் பயனீட்டாளர்கள் பார்க்கவும் அவற்றைப் பற்றி அறிந்துகொள்ளவும் தானியக்க இயந்திரங்கள் பெரிதும் உதவின என்று திரு லிம், 35, ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தார்.

“எங்களைப் போன்ற இணைய வர்த்தக நிறுவனங்கள்மீது பயனீட்டாளர்களுக்கு இணக்கமும் நம்பிக்கையும் வளரத் தானியக்க இயந்திரங்கள் உதவின,” என்றும் அவர் கூறினார்.

முதன்முதலில் பானங்கள், திண்பண்டங்கள் போன்ற பொருள்களை விற்பனைச் செய்யத் தானியக்க இயந்திரங்கள் வைக்கப்பட்டன. ஆனால், அண்மைக் காலங்களில் பூக்கள் முதல் செல்லப் பிராணிகளுக்கான உணவுப்பொருள்கள் வரை விற்பனை செய்யும் தானியக்க இயந்திரங்கள் தீவு முழுக்க இருப்பதை நம்மால் காண முடிகிறது.

தானியக்க இயந்திரங்களைத் தங்கள் பொருள்களுக்கெனப் பிரத்தியேகமாக நிறுவ ஆர்வமுள்ள இணைய வர்த்தக நிறுவனங்களின் எண்ணிக்கை 2021 முதல் கிட்டத்தட்ட 20 விழுக்காடு அதிகரித்துள்ளதாகக் கூறப்பட்டது.

குறிப்புச் சொற்கள்