பதின்ம வயதினருக்கான இணையப் பாதுகாப்பு அனுபவம்

பதின்ம வயதினருக்கான இணையப் பாதுகாப்பு அனுபவம்

3 mins read
cf563c16-a94c-4f8e-b141-de79e7a3e50d
ஜூலை 25ஆம் தேதியன்று நடைபெற்ற இருவழித் தொடர்பு அனுபவ அறிமுக விழாவின்போது இடம்பெற்ற கலந்துரையாடலில் (இடமிருந்து) மெட்டா நிறுவன பொதுக் கொள்கைப் பிரிவுத் தலைவர் டேனியல் லிம், சிறப்பு விருந்தினரான தகவல், மின்னிலக்க மேம்பாட்டுத் துணை அமைச்சர் ரஹாயு மஹ்ஸாம், டாமாய் உயர்நிலைப் பள்ளியின் துணை முதல்வர் பிரேம்லத்தா செல்வராஜ், சமூக ஊடகப் பிரபலமும் பெற்றோருமான நூருல் அயினி, விளையாட்டு வீரர் லீ காய் யாங். - படம்: லாவண்யா வீரராகவன்

பதின்ம வயதினர், பெற்றோர், கல்வியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் சமூக ஊடகங்களைப் பாதுகாப்பாகக் கையாளும் வழிமுறைகளை விளக்கும் இருவழித் தொடர்பு அனுபவம் அறிமுகம் கண்டுள்ளது.

பதின்ம வயதினருக்கான இணையப் பாதுகாப்பு, சமூக ஊடகப் பயன்பாட்டு வழிமுறைகள், உள்ளடக்கக் கட்டுப்பாடுகள், திரை நேரம், இணையவழித் துன்புறுத்தல் எனப் பலவற்றை அது உள்ளடக்கும்.

மெட்டா நிறுவனம் சார்பில் இந்த ‘நடைமுறை வாழ்வில் மின்னிலக்க உரையாடல்கள்’ திரை, தெமாசெக் கடைவீட்டில் உள்ள வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. ஜூன் 25 முதல் ஜூலை 31ஆம் தேதிவரை பொதுமக்களின் பார்வைக்காக அது திறந்திருக்கும்.

வியாழக்கிழமை (ஜூன் 25) நடைபெற்ற அதன் அறிமுக விழாவில் இணையப் பயன்பாடுகளின் பாதுகாப்பு குறித்த கலந்துரையாடலும் இடம்பெற்றது.

தகவல், மின்னிலக்க மேம்பாட்டுத் துணை அமைச்சர் ரஹாயு மஹ்ஸாம் அதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.

இணையப் பாதுகாப்பிற்கான சமூக ஒன்றிணைவு

“பிள்ளைகள் திரையின் முன்னால் செலவிடும் நேரம், அவர்கள் காண நேரிடும் பொருத்தமற்ற உள்ளடக்கங்கள், அவர்கள் யாருடன் தொடர்பில் இருக்கிறார்கள் என்பது உள்ளிட்ட பல கவலைகள் பெற்றோருக்கு உள்ளன,” என்று கூறிய துணை அமைச்சர் ரஹாயு, அவர்களிடையே வளர்க்கப்படவேண்டிய மின்னிலக்கத் திறன்கள் குறித்தும் விளக்கினார்.

மின்னிலக்க அறிவு, மதிப்புகளின் அடிப்படையில் அமைந்த நம்பிக்கை ஆகிய இரண்டும் முக்கியம் என்று அவர் சுட்டினார்.

“குறிப்பிட்ட ஒரு தகவலைப் பார்த்தால், அதே போன்ற உள்ளடக்கங்களைத் தொடர்ந்து காட்டும் சூழலில் அவர்கள் மாட்டிக்கொள்ளக் கூடாது. தங்களுக்குத் தேவையான சரியான உள்ளடக்கங்களைப் பெற குறிப்பிட்ட அமைப்புகளைக் (settings) கட்டுப்படுத்த என்னென்ன கருவிகள் உள்ளன என்பதை அவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும்,” என்றும் அவர் வலியுறுத்தினார்.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

சமூக ஊடகங்களில் கிட்டும் விருப்பக்குறிகளின் அடிப்படையில் இயங்கக்கூடாது எனக் கேட்டுக்கொண்ட துணையமைச்சர், மோசடிகள், செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட உள்ளடக்கங்கள் ஆகியவற்றை அடையாளம் காணும் திறன்களையும் வளர்த்துக்கொள்ள வேண்டுமென்றும் வலியுறுத்தினார்.

அதற்குப் பெற்றோர்கள், பள்ளி என ஒட்டுமொத்தச் சமூகத்தின் ஆதரவும் வேண்டும் என்று அவர் சொன்னார்.

அதற்கு ஆதரவளிக்கும் நோக்கில் அமைச்சுகள் இணைந்து ‘திரைப் பயன்பாட்டில் விழிப்புணர்வு’ (Be ScreenSmart) எனும் இணைய வளம் அறிமுகம் கண்டதையும் நினைவூட்டினார்.

அதேநேரம், தளங்கள் விதிமுறைகளைப் பின்பற்றுவதை உறுதிசெய்யும் ஒழுங்குமுறைக் கட்டமைப்பை உருவாக்குவதன் முக்கியத்துவத்தைச் சுட்டிய அவர், இணையப் பாதுகாப்பு நடைமுறை விதிகள் (Code of Practice) செயல்பாட்டில் உள்ளதையும் அவர் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய டாமாய் உயர்நிலைப் பள்ளியின் துணை முதல்வர் பிரேம்லத்தா செல்வராஜ், “இணையப் பாதுகாப்புத் தொடர்பில், பிள்ளைகள் நீண்ட விரிவுரைகளைக் கேட்பதைவிட தங்கள் கருத்துகளைப் பகிரவே விரும்புகின்றனர். அறிவுரை கூறுவதை விடுத்து, உடனடி எதிர்வினையாற்றுவதைவிட அவர்களின் எண்ணங்களைப் பகிரச் செய்வது முக்கியம். அதற்கேற்ற பாதுகாப்பான, ஆதரவான சூழலை வலியுறுத்துகிறோம்,” என்றார்.

மாணவர்களிடம் சிந்தனைத்திறன், கழிவிரக்கம், பிறரது பார்வையைப் புரிந்துகொள்ளும் திறன் ஆகிய சமூக உணர்வுத் திறன்களை வளர்ப்பதாகவும் அது நீண்ட காலத்தில் உதவுமென்றும் சொன்னார்.

நடைமுறை வாழ்க்கைச் சூழல்களை முன்வைத்து விவாதங்களை ஊக்குவிப்பதாகவும் அவர் கூறினார்.

“பள்ளிகளின் பொறுப்பு, மாணவர்களின் இணையவழி நடத்தையைக் கண்காணிப்பதன்று. யாரும் கவனிக்காதபோதும் சரியான முடிவுகளை எடுக்கக்கூடிய, சிந்தனைமிக்க, பொறுப்பான மின்னிலக்கக் குடிமக்களாக உருவாக்குவதே ஆகும்,” என்றார் பிரேம்லத்தா.

கற்றல், நல்வாழ்வுக்கு ஆதரவளிக்கும் வகையில், மின்னிலக்க உலகில் மூழ்கிவிடாமல், சோர்வடையாமல் சமநிலையைப் பேணும் வகையில் பல்வேறு செயல்பாடுகளை உருவாக்கியுள்ளதையும் அவர் குறிப்பிட்டார்.

தொடர்ந்து, சமூக ஊடகப் பிரபலமும் பெற்றோருமான நூருல் அயினியும் விளையாட்டு வீரர் லீ காய் யாங்கும் தங்கள் கண்ணோட்டங்களைப் பகிர்ந்தனர்.

பாதுகாப்பு அம்ச விழிப்புணர்வு

இந்த அறிமுக நிகழ்ச்சியில், மெட்டா தளங்களில் அறிமுகம் கண்டுள்ள ‘பதின்ம வயதினருக்கான’ கணக்கில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள், பெற்றோர் மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் எனப் பலவற்றையும் மெட்டா நிறுவன வல்லுநர் ஒருவர் விளக்கினார்.

மேலும், இரு பள்ளிகளைச் சேர்ந்த 304 மாணவர்கள், 18 கல்வியாளர்களிடையே அவை குறித்த பயிலரங்கையும், அதனைத் தொடர்ந்த ஆய்வையும் மெட்டா நிறுவனம் நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்