இணையத்தில் போலிப் பொருள்களை விற்றதாகச் சந்தேகிக்கப்படும் 30, 47 வயது நிரம்பிய பெண்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
ஈசூன் ரிங் ரோடு, கம்பாஸ் கிரசன்ட், புக்கிட் பாத்தோக் வெஸ்ட் அவென்யூ 4, புக்கிட் பாத்தோக் கிரசன்ட் ஆகிய பகுதிகளில், கடந்த ஏப்ரல் 27ஆம் தேதிக்கும் மே 19ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது அவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
அப்போது, காவல்துறையினர் கிட்டத்தட்ட 400 போலிப் பொருள்களைக் கண்டுபிடித்தனர்.
கைப்பற்றப்பட்ட பொருள்களின் மதிப்பு $14,800க்கும் அதிகம் என்று வியாழக்கிழமை (மே 21) வெளியிட்ட செய்தியாளர் அறிக்கையில் காவல்துறை தெரிவித்தது.
சொகுசுக் கைப்பைகள், பணப்பைகள், கைக்கடிகாரங்கள், ஆபரணங்கள் உள்ளிட்டவை அவற்றில் அடங்கும்.
“நாங்கள் அறிவுசார் சொத்துரிமை மீறல்களைக் கடுமையாகக் கருதுகிறோம்; இணையத் தளங்கள் வழியாகப் போலிப் பொருள்களை விநியோகிப்பதும் விற்பனை செய்வதும் கடுமையான குற்றங்களாகும் என்பதைப் பொதுமக்களுக்கு நினைவூட்ட விரும்புகிறோம்,” என்று காவல்துறை தெரிவித்தது.
அந்த இரு பெண்கள் மீதான விசாரணை தொடர்கிறது.
வர்த்தக நோக்கத்திற்காக, போலியான வர்த்தக முத்திரைகளைக் கொண்ட பொருள்களை வைத்திருக்கும் குற்றம் நிரூபிக்கப்படுவோருக்கு $100,000 வரை அபராதம், ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.
தொடர்புடைய செய்திகள்
முன்னதாக, போலி சொகுசுப் பொருள்களைத் தொடர்ச்சியாக விற்பனை செய்ததாகச் சிங்கப்பூரைச் சேர்ந்த இன்ஸ்டகிராம் விற்பனையாளர் ஒருவர்மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
அந்த விற்பனையாளர், பிரெஞ்சு சொகுசுத் தயாரிப்பு நிறுவனமான லுயி விட்டோனுக்கு 510,000 வெள்ளி இழப்பீடு வழங்கவேண்டும் என்று கடந்த மே 6ஆம் தேதி மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.

