மலேசியாவுக்குப் பயணிகளை ஏற்றிச் செல்லும் சட்டவிரோதச் சேவையை வழங்கிய ஓட்டுநர்கள் பிடிபட்டதிலிருந்து உரிமம் பெற்ற தனியார் வாடகைக் கார் ஓட்டுநர்கள், டாக்சி ஓட்டுநர்களின் வருமானம் கணிசமாக உயர்ந்துள்ளதாக தொழிற்சங்கத் தலைவர் இங் சீ மெங் தெரிவித்துள்ளார்.
மலேசியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையே பயணச் சேவை வழங்கும் தனியார் வாடகைக் கார் ஓட்டுநர்கள் தற்போது 15 விழுக்காடு கூடுதலாக வருமானம் ஈட்டுகின்றனர். அதே சேவையை வழங்கும் டாக்சி ஓட்டுநர்களின் வருமானம் கிட்டத்தட்ட 30 விழுக்காடு கூடியது.
கடுமையான அமலாக்க நடவடிக்கைகளால் கரையோரப் பூந்தோட்டங்கள், சாங்கி விமான நிலையம் போன்ற முக்கிய சுற்றுலாத் தலங்களுக்கு பயணச் சேவை வழங்கும் சொகுசு கார்களும் பெரிய வாகனங்களும் அதிகம் பயனடைந்தன என்று தேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸ் அறிக்கையில் சொன்னது.
ஃபேர்ன்வேல் சமூக மன்றத்தில் கிட்டத்தட்ட 60 இணையவழி ஊழியர்களுடன் கலந்துரையாடிய திரு இங், ஊழியர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் இதுபோன்ற விவகாரங்களைக் களைய அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகள் பலன் தந்துள்ளதை அவர்கள் சொன்ன கருத்துகள் மூலம் வெளிப்பட்டது என்றார்.
“தற்போதைய நடவடிக்கை நல்ல பலன் அளித்துள்ளது என்றாலும் இணையவழி ஊழியர்களின் வேலை சூழல் நியாயமானதாக இருக்க இன்னும் பலவற்றைச் செய்யவேண்டும்,” என்று திரு இங் சொன்னார்.
கலந்துரையாடலில் பங்கேற்ற ஊழியர்கள் எவ்வாறு தங்கள் வருமானம் கணக்கிடப்படுகிறது என்பது பற்றிய தெளிவான வரையறை இல்லாததால் தங்களுக்கு நியாயமான சம்பளம் கிடைக்கிறதா என்பதைச் சரிபார்க்க சிரமமாக இருக்கிறது என்று தெரிவித்தனர்.
விநியோகச் சேவைகளில் சட்டவிரோதமாக ஈடுபடும் வெளிநாட்டு ஊழியர்களால் இணையவழி ஊழியர்கள் பாதிக்கப்படுவதைக் களைய பணிக்குழு ஒன்று அமைக்கப்படும் என்று அரசாங்கம் இரண்டு மாதங்களுக்கு முன் அறிவித்ததை முன்னிட்டு திரு இங்குடனான கலந்துரையாடல் நடைபெற்றது.
விவகாரம் குறித்து தெரிவித்த தேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸ், இணையவழி ஊழியர்களுக்கு அது நேர்மையற்ற போட்டியை உருவாக்குவதாகச் சொன்னது.
தொடர்புடைய செய்திகள்
2022ஆம் ஆண்டிலிருந்து சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் சட்டவிரோதப் பயணச் சேவை வழங்கிய 136 ஓட்டுநர்கள் பிடிபட்டனர். அத்தகையோரின் வெளிநாட்டில் பதிவுசெய்யப்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸ் 70க்கும் அதிகமான வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகச் சொன்னது.