பயங்கரவாதம் நிறைந்த இன்றைய உலகில் சிங்கப்பூர் முன்னேற வேண்டுமென்றால் நாட்டைப் பாதுகாக்க சிங்கப்பூரர்கள் ஒன்றுகூடிச் செயல்பட வேண்டும் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியுள்ளார்.
“சிங்கப்பூர் தடுமாறினால் நமக்கு உதவ வேறு எந்த நாடும் வராது. சிங்கப்பூரர்களுக்கு உதவக்கூடியவர்கள் சிங்கப்பூரர்கள் மட்டுமே,” என்று அவர் குறிப்பிட்டார்.
ஏழாவது ஆண்டாக ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 16) மாலை நடைபெற்ற ‘இஃப்தார் உதாரா’ நோன்பு துறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றியபோது பிரதமர் வோங் இவ்வாறு தெரிவித்தார்.
சிங்கப்பூரின் மிகப்பெரிய நோன்பு துறப்பு நிகழ்ச்சிகளில் ஒன்றான இந்நிகழ்வில், வெவ்வேறு சமயங்களையும் இனங்களையும் சேர்ந்த கிட்டத்தட்ட 7,000 பேர் மார்சிலிங் வட்டாரத்தில் உள்ள மாபெரும் விளையாட்டுப் பூங்காவில் ஒன்றுகூடி நோன்பு துறந்தனர்.
சிங்கப்பூரில் பல்வேறு சமயத்தினரும் இனத்தவரும் ஒன்றாக அமர்ந்து நோன்பு துறப்பதைப்போல் வேறு எந்த நாட்டிலும் பார்க்க முடியாது என்று பிரதமர் தமது உரையில் குறிப்பிட்டார்.
இதை ஒரு மதிப்புமிக்க பழக்கமாகக் குறிப்பிட்ட பிரதமர், அதைத் தொடர்ந்து பேணிக் காக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
“நம்மிடையே வேறுபாடுகள் இருந்தாலும், சிங்கப்பூரை எப்போதும் நம் இதயத்தில் வைத்திருக்க வேண்டும்,” என்றார் அவர்.
இந்நிகழ்ச்சிக்கு மார்சிலிங் குடிமக்கள் ஆலோசனைக் குழு, இந்திய முஸ்லிம் சமூகச் சேவை சங்கம், அன்நுர் பள்ளிவாசல் (Masjid AnNur) ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.
தொடர்புடைய செய்திகள்
தற்காப்பு, மனிதவள மூத்த துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது உள்ளிட்ட மற்ற மார்சிலிங் - யூ டீ குழுத்தொகுதி அடித்தள ஆலோசகர்களும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
இளையர்களிடையே சமயங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை வலுப்படுத்த, முதன்முறையாக நல்லிணக்க வட்டங்களின் இளம் தலைவர்கள் பிரிவுடன் (Youth Leaders @ Harmony Circle) இணைந்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன.
இந்திய முஸ்லிம் சமூக சேவை சங்கத்தைச் சேர்ந்த ஏறத்தாழ 200 இளம் தொண்டூழியர்கள் இந்நிகழ்ச்சியில் உதவியதாக சங்க நிர்வாகக்குழு உறுப்பினர் ஸீலைகா பீவி, 30, கூறினார். இருப்பினும், பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால் மார்சிலிங் வட்டாரத்தில் இருக்கும் பல்வேறு அமைப்புகளையும் பள்ளிகளையும் சேர்ந்த தொண்டூழியர்களும் உதவ முன்வந்ததாக அவர் சொன்னார்.
இந்நிகழ்ச்சி தொடர்பான ஏற்பாடுகள் சனிக்கிழமை காலை 11 மணிக்குத் தொடங்கிவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
“ஏழு ஆண்டுகளுக்குமுன் ஒரு சிறிய சமூக நிகழ்ச்சியாக தொடங்கிய ‘இஃப்தார் உதாரா’, இன்று வடக்கு வட்டாரத்தில் வாழும் பலரும் ஆண்டுதோறும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்து கலந்துகொள்ளும் ஒரு பெரிய நிகழ்ச்சியாக வளர்ந்துள்ளது,” என்று மார்சிலிங் குடிமக்கள் ஆலோசனைக் குழு உறுப்பினர் ந.சிவராஜன், 52, கூறினார்.