$220 மில்லியன் செலவில் புதிய வேதி ஆலை திறப்பு; 300 பேருக்குமேல் வேலைவாய்ப்பு

2 mins read
1ed3090c-5bad-4ea0-8f8b-fd5bd4ef5a2e
‘சாபிக்’ நிறுவனத்தின் வேதி ஆலைத் திறப்பு விழாவிற்கு வருகை தந்த வர்த்தக, தொழில் மூத்த துணை அமைச்சர் லோ யென் லிங்கை வரவேற்கிறார் அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாகி அப்துல்ரகுமான் அல் ஃபகீஹ். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

முன்னணி சவூதி அரேபிய பெட்ரோகெமிக்கல் நிறுவனமான ‘சாபிக்’ (SABIC) $220 மில்லியன் செலவில் வியாழக்கிழமையன்று (நவம்பர் 7) சிங்கப்பூரில் புதிய வேதித் தொழிற்சாலையை அதிகாரபூர்வமாகத் திறந்துள்ளது.

பைனியரில் அமைந்துள்ள அந்த ஒன்பது தளத் தொழிற்சாலை, சிங்கப்பூரில் ‘சாபிக்’ நிறுவனத்தின் இரண்டாவது ஆலை.

விண்வெளியியல், சுகாதாரப் பராமரிப்பு, மின்சார வாகனங்கள் போன்றவற்றுக்குத் தேவையான வலுமிக்கதொரு பல்படிம வேதிப்பொருள் (Resin) அந்த ஆலையில் தயாரிக்கப்படும்.

கடந்த 2023 செப்டம்பரில் செயல்படத் தொடங்கிய அந்த ஆலை, ஆண்டிற்கு 8,000 டன் ULTEM ரெசினைத் தயாரிக்கும். இதன்மூலம் ‘சாபிக்’ நிறுவனத்தின் வருடாந்தர உற்பத்தி 50 விழுக்காட்டிற்குமேல் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்போது அந்த ஆலையில் எத்தனை பேர் பணியாற்றுகின்றனர் என்ற விவரத்தை ‘சாபிக்’ வெளியிடவில்லை. ஆயினும், சிங்கப்பூரில் தனது ஊழியரணியை 300க்கும் மேல் உயர்த்த அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அவர்களில் பொறியாளர்கள், அறிவியல் வல்லுநர்கள், வேதியியலாளர்கள் போன்றோரும் அடங்குவர்.

ஆலைத் திறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வர்த்தக, தொழில் மூத்த துணை அமைச்சர் லோ யென் லிங், உற்பத்தித் துறை சிங்கப்பூர்ப் பொருளியலின் அடிக்கல்லாக விளங்குகிறது என்றார்.

எரிசக்தி மற்றும் வேதிப்பொருள்கள் துறையின் பங்களிப்பு, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மூன்று விழுக்காடு என அவர் குறிப்பிட்டார்.

இதன்மூலம், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஆகப் பெரிய இரண்டாவது துறையாக அது விளங்குகிறது.

அத்துடன், சிங்கப்பூரின் மொத்த நிலைச்சொத்து முதலீட்டுக் கடப்பாடுகளில் வேதிப்பொருள்கள் பெரும்பங்கு வகிக்கின்றன. கடந்த 2003 நிதியாண்டில் அதன் மதிப்பு $4.5 பில்லியனாக இருந்தது.

“சாபிக் நிறுவனத்தின் புதிய ஆலைத் திறப்பானது, வேதித்துறையில் ஆசியாவின் நுழைவாயிலாகவும் முன்னணி நடுவமாகவும் சிங்கப்பூர் பங்காற்ற முடியும் என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது,” என்றார் திருவாட்டி லோ.

சவூதி தலைநகர் ரியாத்தைத் தலைமையகமாகக் கொண்ட ‘சாபிக்’ நிறுவனம், உலகம் முழுதுமிருந்தும் 31,000 ஊழியர்களைக் கொண்டுள்ளது. அந்நிறுவனத்திற்கு 140 நாடுகளில் வாடிக்கையாளர்கள் உள்ளனர். இவ்வாண்டு செப்டம்பர் 30ஆம் தேதியுடன் முடிந்த காலாண்டில் அது ஒரு பில்லியன் ரியாலை (S$354 மில்லியன்) நிகர லாபமாக ஈட்டியது.

குறிப்புச் சொற்கள்