தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூர்க் குடியிருப்பாளர்களில் பாதிப் பேர் ஒருபோதும் நிதிச் சுதந்திரம் அடையப் போவதில்லை எனக் கருத்துரைப்பு

2 mins read
சிங்லைஃப் நிதிச் சுதந்திரக் குறியீடு தொடர்பான கருத்தாய்வு
ca000755-e2ec-4b3b-abd6-5a37f79fee27
இணையவழிக் கருத்தாய்வில் 18 வயதுக்கும் 65 வயதுக்கும் இடைப்பட்ட 3,000 பேர் கருத்துரைத்தனர். ஏப்ரல் மாதத்துக்கும் ஜூன் மாதத்துக்கும் இடையில் சிங்கப்பூரர்களும் நிரந்தரவாசிகளும் அதில் பங்கேற்றனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் கிட்டத்தட்ட ஐவரில் இருவர், தற்போதைய நிலைமை தொடர்ந்தால் தங்களால் ஒருபோதும் நிதிச் சுதந்திரம் அடைய முடியாது என்று கருத்தாய்வு ஒன்றில் கூறியுள்ளனர்.

இணையம் வழியாக நடத்தப்பட்ட கருத்தாய்வில் 3,000 பேர் கருத்துரைத்தனர்.

அவர்களில் 29 விழுக்காட்டினர் தங்களால் நிதிச் சுதந்திரம் அடைய முடியும் என்றனர். 27 விழுக்காட்டினர் ஏற்கெனவே தாங்கள் அதை அடைந்துவிட்டதாகக் கூறினர். 44 விழுக்காட்டினர் ஒருபோதும் நிதிச் சுதந்திரம் அடைய முடியாது என்று குறிப்பிட்டனர்.

சிங்லைஃப் காப்பீட்டு நிறுவனம் நடத்திய கருத்தாய்வில் 18 வயதுக்கும் 65 வயதுக்கும் இடைப்பட்ட சிங்கப்பூரர்களும் நிரந்தரவாசிகளும் கலந்துக்கொண்டனர்.

கருத்தாய்வு கடந்த ஏப்ரல் மாதத்திற்கும் ஜூன் மாதத்திற்கும் இடையில் நடத்தப்பட்டது.

நிதிச் சுதந்திரம் இல்லாமைக்கு அவர்கள் குறிப்பிட்ட காரணங்களில் முன்னிலை வகிக்கும் மூன்று காரணங்கள், போதிய வருமானம் இல்லாதது, எதிர்பாராத தனிப்பட்ட அல்லது ஆரோக்கியச் சூழல்கள், வேலைப் பாதுகாப்பின்மை ஆகியவை.

சிங்லைஃப் நிறுவனம் இரண்டாவது முறையாக நிதிச் சுதந்திரக் குறியீட்டை வெளியிட்டது.

இந்த ஆண்டுக்கான (2024) குறியீட்டில் குடியிருப்பாளர்கள் 100க்கு 58 புள்ளிகள் பெற்றுள்ளனர். சென்ற ஆண்டு இது 60ஆகப் பதிவானது.

பணவீக்கம், ஓய்வுக்காலத்திற்குப் போதிய சேமிப்பு இல்லாதது, மருத்துவக் கட்டணங்கள் போன்றவை அதிக மனஅழுத்தத்தைத் தருவதாகக் கருத்தாய்வில் கலந்துகொண்ட பெரும்பாலோர் தெரிவித்தனர்.

பிள்ளை பெற்றுக்கொண்டால் நிதிச் சுதந்திரம் அடைய 15 ஆண்டுகள் தாமதம் ஆகக்கூடும் என்று கருதுவதாக 44 விழுக்காட்டினர் கூறினர். எஞ்சியவர்களில் 22 விழுக்காட்டினர் பிள்ளை பெற்றுக்கொள்வதால் நிதிச் சுதந்திரம் தள்ளிப்போகும் என்று கருதவில்லை; 33 விழுக்காட்டினர் இதுகுறித்துக் கருத்துரைக்கவில்லை.

55 வயதுக்கும் 64 வயதுக்கும் இடைப்பட்டவர்கள், ஆக இளைய குழந்தையின் வயது 16க்குமேல் இருப்பவர்கள், அதிகமான மாதாந்தரக் குடும்ப வருமானம் உடையவர்கள் ஆகிய பிரிவினரிடையே பிள்ளை பெற்றுக்கொள்வதால் நிதிச் சுதந்திரம் அடைவதில் தாமதம் ஏற்படும் என்ற கருத்து நிலவுகிறது.

கருத்தாய்வில் கலந்துகொண்டோரில் பாதிப் பேர், ஒரு குழந்தையை 21 வயது வரை வளர்ப்பதற்கு $500,000க்குமேல் தேவைப்படுவதாகக் கூறினர். நிதிச் சுதந்திரம் அடைவது எப்படி என்பதைத் தாங்கள் அறிந்திருப்பதாகவும் 50 விழுக்காட்டினர் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்