சிங்கப்பூரின் அடுத்த பொதுத் தேர்தலுக்கான தேதியோ தேர்தல் தொகுதி எல்லைகளோ இன்னும் அறிவிக்கப்படாதபோதும் எதிர்த்தரப்புச் சிறுகட்சிகள் தாங்கள் போட்டியிடவிருக்கும் தொகுதிகளில் ஆதரவு திரட்ட முனைந்துள்ளன.
இந்தச் சிறுகட்சிகளுக்கு இடையிலான சில கருத்து வேறுபாடுகளால் பன்முனைப் போட்டிகளைத் தவிர்க்க எதிர்க்கட்சிகள் கூட்டணிகளை அமைக்கும் முயற்சி பாதிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் இவற்றில் சில தங்கள் உத்தேச வேட்பாளர்களை அடையாளம் கண்டுள்ளதாகவும் வேட்புமனுத் தாக்கல் நாளுக்குச் சிறிது காலம் முன்புதான் அவர்களின் பெயர்கள் வெளியிடப்படும் என்றும் கூறப்படுகிறது.
2023ஆம் ஆண்டு அக்டோபரில் மக்கள் குரல் கட்சி (PV), சீர்திருத்தக் கட்சி (RP), மக்கள் சக்திக் கட்சி (PPP), ஜனநாயக முற்போக்குக் கட்சி (DPP) ஆகியவை இணைந்து சீர்திருத்தத்துக்கான மக்கள் கூட்டணியை (PAR) அதிகாரபூர்வமாகப் பதிவுசெய்தன.
ஆனால், பிப்ரவரி 22ஆம் தேதி மக்கள் சக்திக் கட்சி அந்தக் கூட்டணியிலிருந்து விலகுவதாகவும் தெம்பனிஸ் குழுத்தொகுதியில் போட்டியிடப்போவதாகவும் கூறியது.
2023 அக்டோபரில், ‘த கோயலிஷன்’ எனும் பெயரில் தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சி (NSP), ஒன்றுபட்ட சிவப்புப் புள்ளிக் கட்சி (RDU), சிங்கப்பூர் மக்கள் கட்சி (SPP), சிங்கப்பூர் ஐக்கியக் கட்சி (SUP) ஆகியவையும் அதிகாரபூர்வமற்ற முறையில் ஒரு கூட்டணியை அமைத்தன.
எந்தத் தொகுதியில் எந்தக் கட்சி போட்டியிடுவது என்பது தொடர்பான மோதலைக் கூட்டணிக் கட்சிகள் பேசித் தீர்த்துக்கொள்ளும் என்று சிங்கப்பூர் ஒற்றுமைக் கட்சி கூறியுள்ளது.
அங் மோ கியோ குழுத் தொகுதி, இயோ சூ காங், கெபுன் பாரு ஆகிய தனித்தொகுதிகளிலும் போட்டியிட அது விரும்புகிறது.
தொடர்புடைய செய்திகள்
அந்தக் கூட்டணியைச் சேர்ந்த சிங்கப்பூர் மக்கள் கட்சி பீஷான் - தோ பாயோ குழுத்தொகுதி, பொத்தோங் பாசிர் தனித்தொகுதியிலும் போட்டியிட விரும்புகிறது. 2020ஆம் ஆண்டு முதலே அந்த இடங்களில் அது தொகுதி உலா நடத்திவருகிறது.
சிங்கப்பூர் ஐக்கியக் கட்சி ஜூரோங் குழுத்தொகுதியில் வேட்பாளர்களைக் களமிறக்கத் திட்டமிட்டுள்ளது. நீ சூன் குழுத்தொகுதியிலும் தொகுதி உலாக்களுக்குக் குழுக்களை அது அனுப்பிவருகிறது.
நான்கு தொகுதிகளிலாவது போட்டியிட எண்ணுவதாகவும் குறைந்தபட்சம் 12 பேரை வேட்பாளர்களாகக் களமிறக்கவிருப்பதாகவும் அது கூறியது.
சிங்கப்பூர் நீதிக் கட்சி, சிங்கப்பூர் மலாய் தேசிய அமைப்பு ஆகியவை இடம்பெறும் சிங்கப்பூர் ஜனநாயகக் கூட்டணி, பாசிர் ரிஸ் பொங்கோல் குழுத்தொகுதியில் தொடர்ந்து வாக்காளர்களை ஈர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுவருகிறது.
சிறுகட்சிகளின் தலைவர்கள், எதிர்த்தரப்பில் பாட்டாளிக் கட்சி அல்லது சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் ஆதிக்கத்தைப் பொருட்படுத்தவில்லை என்று கூறுவதாக ‘சிஎன்ஏ’ தெரிவித்தது.
ஆனால் இத்தகைய சிறு[Ϟ]கட்சிகள் முன்கூட்டியே செயல்படத் தொடங்கியிருப்பது கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தங்களுக்குச் சாதகமான அம்சங்களைப் பெறுவதற்கான உத்தியாகத் தோன்றுவதாக அரசியல் கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.
மும்முனைப் போட்டிகளைத் தவிர்க்க முடியுமானால், இத்தகைய சிறுகட்சிகள் தேர்தல் ரீதியாக முக்கியத்துவம் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். பின்னர் அவை மெதுவாக தங்களை நிலைநிறுத்திக் கொள்ளலாம் என்று கவனிப்பாளர்கள் சிலர் கருதுகின்றனர்.
தங்கள் அடையாளத்தை உருவாக்குவதில் சிறுகட்சிகள் அதிகம் கவனம் செலுத்த வேண்டியிருப்பதை அவர்கள் சுட்டினர்.