சவாலான சூழலுக்கு இடையே சிங்கப்பூரைத் திறம்பட வழிநடத்த வலுவான அரசாங்கம் தேவை என்றும் நாடாளுமன்றத்தில் அதிக இடங்கள் வேண்டும் எனக் கூறும் எதிர்க்கட்சியினருக்கு நாட்டை வழிநடத்துவதற்கான பொறுப்புகளைக் கையாள விருப்பமில்லை என்றும் பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.
“தேர்தலுக்குப் பிறகு எதிர்க்கட்சியினர் அதிகம் புகுந்தால் என்னால் எப்படி ஒரு சிறந்த அமைச்சரவையை உருவாக்க முடியும்?” என்று கேள்வி எழுப்பினார் மசெகவின் தலைமைச் செயலாளருமான திரு வோங்.
திங்கட்கிழமை (ஏப்ரல் 28) நண்பகல் நடந்த மக்கள் செயல் கட்சி பிரசார கூட்டத்தில் பிரதமர் பேசினார்.
பத்தாண்டுகளில் யூஓபி பிளாசா புரொமனாட் அருகில் நடைபெற்ற இந்த முதல் ஃபுல்லர்ட்டன் பிரசார கூட்டத்தில் ஏராளமான மக்கள் திரண்டிருந்தனர்.
கடந்த காலங்களில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை ஈர்த்த இந்தப் பிரசாரக் கூட்டம், அமரர் லீ குவான் யூ, 1950கள் முதல் 1980கள் வரை பல தேர்தல் பிரச்சார உரைகளை நிகழ்த்திய ஃபுல்லர்ட்டன் ஸ்குவேருக்கு அருகில் அமைந்திருப்பதால் ஃபுல்லர்ட்டன் பிரசார கூட்டம் என்று அழைக்கப்படுகிறது.
பிரதமர் வோங்குடன், மூத்த அமைச்சர் லீ சியன் லூங், கல்வி அமைச்சர் சான் சுன் சிங், பிரதமர் அலுவலக அமைச்சர் இந்திராணி ராஜா, மசெகவின் புதுமுகங்களில் சிலர் ஆகியோர் இருந்தனர்.
ஓராண்டுக்கு முன்னர் பிரதமராக தாம் பதவியேற்றதைத் தமது உரையில் குறிப்பிட்ட திரு வோங், இந்தக் குறுகிய காலத்தில் சிங்கப்பூரர்களுக்காகத் தாம் பல பணிகளைச் செய்துள்ளதாகவும் அரசியலிலிருந்து ஓய்வுபெறும் மூத்த அமைச்சர் டியோ சீ ஹியன், துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட், தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் ஆகியோரைத் தாம் அதிக அளவில் சார்ந்திருந்ததாகவும் சொன்னார்.
துணை பிரதமர் கான் கிம் யோங் கொவிட்-19 நெருக்கடி காலத்தில் நாட்டை நன்கு வழிநடத்திச் சென்றதாகக் கூறிய பிரதமர் வோங், மசெகவுக்கு புதுமுகங்களின் வருகை மிக அவசியம் என்று வலியுறுத்தினார். அவர்களில் ஒருவரான தினேஷ் வாசு தாஸ் திறன்மிக்கவர் என்றும் திரு வோங் குறிப்பிட்டார்
தொடர்புடைய செய்திகள்
“எதிர்க்கட்சிக்கு வாக்களிப்பது என்பது நாடாளுமன்றத்தில் அதிக மாற்றுக் குரல்களுக்கான சுதந்திரமான வாக்களிப்பு அன்று. அது நடந்தால் என்னையும் என் குழுவையும் கடுமையாகத் துன்புறுத்தும்,” என்றார் அவர்.
நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் இதே ஃபுல்லர்ட்டன் பிரசாரக் கூட்டத்தில் அமரர் லீ குவான் யூ அரசியல் ஒரு சூதாட்டமன்று என்று சொன்னதை திரு வோங் நினைவுகூர்ந்தார். அத்துடன், மக்கள் தங்களுக்கு அதிகாரம் வழங்கினால் தாமும் தமது குழுவும் பொருளியல் சவால்களை எதிர்கொண்டு, சிங்கப்பூரை நன்கு வழிநடத்திச் செல்ல தயார் என்றும் உறுதியளித்தார்.
“எதிர்க்கட்சியினர் பொருள், சேவை வரி பற்றி அதிகம் குறைகூறுகின்றனர். அதுபற்றி நான் நாடாளுமன்றத்தில் பலமுறை விளக்கியுள்ளேன். அவர்களின் திட்டங்கள் கவர்ச்சிகரமாக இருந்தாலும் அவை நடைமுறைக்குச் சாத்தியமில்லாதவை,” என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
சிங்கப்பூரர்களுக்கு சிறந்த வேலை வாய்ப்புகளை வழங்குவது குறித்து பேசிய திரு வோங், புதிய பட்டதாரிகளுக்கும் முழு நேர வேலைகளில் இருப்பவர்களுக்கும் கூடுதல் ஆதரவு கிடைக்கும் என்று நம்பிக்கை அளித்தார்.
துணைப் பிரதமர் கான் அதிக பொறுப்புகளைக் கையாள்வதாகத் தெரிவித்த பிரதமர் வோங், அமெரிக்காவுடன் வரி விதிப்பு, வணிக விவகாரங்கள் குறித்து, அவர் முன்னிலையில் நின்று பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் குறிப்பிட்டார்.
“திரு கானுக்கு நம் ஆதரவை அளிப்போம். அப்போதுதான் சிங்கப்பூருக்கும் தொழிலாளர்களுக்கும் நம்மால் நல்ல பலன்களைப் பெற முடியும்,” என்றார் திரு வோங்.
தேர்தலுக்குப் பிறகு மசெக மீண்டும் ஆட்சியமைத்தால் தாம் பல நாடுகளுக்குச் செல்ல வேண்டியிருக்கும் என்றும் அவர் சொன்னார்.
வெளியுறவுக் கொள்கையைச் செயல்படுத்துவது மிகவும் கடினமாக இருக்கும் என்ற திரு வோங், சிங்கப்பூர் போன்ற சிறிய நாடுகள் கடுமையாக உழைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
“வரிவிதிப்பில் அமெரிக்கா பிடிவாதமாக இருந்தால் பன்னாட்டு நிறுவனங்கள் பல அந்நாட்டிற்கு ஏற்றுமதி செய்ய சிங்கப்பூரை ஒரு தளமாகப் பயன்படுத்த வேண்டாம் என்று தேர்வுசெய்யலாம். இது நம் பொருளியலை மோசமாக பாதிக்கும், வேலை வாய்ப்புகள் குறையும்,” என்று திரு வோங் எச்சரித்தார்.
இத்தகைய சவால்களைக் கடந்து செல்ல தம்மால் முடியும் என்ற அவர், மக்கள் தம் மீது நம்பிக்கை வைத்து மசெகவுக்கு வாக்களிக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்.
பிரசாரத்தில் பேசிய அமைச்சர் இந்திராணி, புவிசார் அரசியல் பதற்றநிலைகள் நிறைந்த இப்போதைய உலகச் சூழலில் சிங்கப்பூரில் அமைதி நிலவுவதற்கான காரணம் மசெகதான் என்றார்.
சிங்கப்பூரர்களின் கவலைகள் ஒவ்வொன்றுக்கும் மசெக செவிசாய்த்து வருவதாகக் கூறிய அவர், எதிர்காலம் பிரகாசமாக இருக்க தங்கள் கட்சிக்கே வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
மசெக சார்பில் அல்ஜுனிட் குழுத்தொகுதியில் களமிறங்கும் புதுமுக வேட்பாளர்களில் ஒருவரான ஜெகதீஸ்வரன் ராஜு, ஊழியர்களுக்கு சிறந்த வேலை வாய்ப்புகளை வழங்குவது குறித்து தமிழில் பேசினார்.