மரின் பரேட்-பிரேடல் ஹைட்ஸ் குழுத்தொகுதியில் போட்டியிடுவதில்லை என்று பாட்டாளிக் கட்சி எடுத்த கடைசி நேர முடிவு, எதிர்காலத் தேர்தல்களில் எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பதையும் பலமுனைப் போட்டிகளைத் தவிர்ப்பதையும் பெரும்பாலும் சாத்தியமற்றதாக்கி உள்ளது.
கம்போங் அட்மிரால்டி உணவு அங்காடி நிலைய உலாவில் வியாழக்கிழமை (ஏப்ரல் 24) பேசிய தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சியின் தலைமைச் செயலாளர் ஸ்பென்சர் இங், பலமுனைப் போட்டிகளைத் தவிர்க்க எதிர்க்கட்சிகளிடையே ஒற்றுமையைக் கட்டிக்காப்பது என்பது ‘மிகவும் கடினமாக அல்லது சாத்தியமற்றதாக’ இருக்கும் என்று கூறினார்.
“சில கட்சிகள், எதிர்க்கட்சி ஒற்றுமை என்ற பெயரில், மற்ற கட்சிகள் தங்களுக்கு வழிவிட வேண்டும் என்று கோருகின்றன. ‘எதிர்க்கட்சி ஒற்றுமை’ என்ற சிந்தனையைப் பயன்படுத்தி அவர்கள் காரியம் சாதிக்க நினைக்கிறார்கள்,” என்று செம்பவாங் குழுத்தொகுதியில் போட்டியிடும் தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சியின் அணித் தலைவர் திரு இங் கூறினார்.
மக்கள் சக்தி கட்சியின் (பிபிபி) தலைமைச் செயலாளர் கோ மெங் செங்கின் கருத்தை அவரது கருத்தும் எதிரொலிக்கிறது. மரின் பரேட்-பிரேடல் ஹைட்ஸ் குழுத்தொகுதியில் போட்டியிடுவதில்லை என்ற பாட்டாளிக் கட்சியின் முடிவால் அவர் கோபமடைந்ததாகத் திரு கோ கூறினார்.
‘சிங்கப்பூருக்கு உழைக்கிறோம்’ (Working for Singapore) என்ற பாட்டாளிக் கட்சியின் முழக்கவரி மிகவும் முரணானது. 130,000 வாக்காளர்களின் வாக்களிக்கும் உரிமையைப் பறிக்கும்போது சிங்கப்பூருக்காக உண்மையிலேயே உழைக்கிறார்களா?” என்று அவர் கூறியதாகச் சொல்லப்படுகிறது.
தொகுதி எல்லைகள் மாற்றப்பட்டதும் மரின் பரேட்-பிரேடல் ஹைட்ஸ் குழுத்தொகுதியில் போட்டியிட தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சி ஆர்வத்தை வெளிப்படுத்தியது. 2011ல் மரின் பரேட் குழுத்தொகுதியில் அக்கட்சி போட்டியிட்டது.
2020 தேர்தலில் பாட்டாளிக் கட்சிக்கு எதிராக 57.74 விழுக்காடு வாக்குகளைப் பெற்று மரின் பரேட் குழுத்தொகுதியை மக்கள் செயல் கட்சி (மசெக) தக்கவைத்துக் கொண்டது. இது 2015ஆம் ஆண்டின் 64.07 விழுக்காடு வாக்குகளை விட அதுக் குறைவு.
இந்தத் தேர்தலில் பாட்டாளிக் கட்சி அத்தொகுதியில் போட்டியிடுவதில்லை என்று கடைசிநேரத்தில் முடிவெடுத்ததுடன், தெம்பனிஸ் குழுத்தொகுதியில், தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சி, மசெக, மக்கள் சக்திக் கட்சி ஆகியவற்றுக்கு எதிராக பாட்டாளிக் கட்சி நான்கு முனைப் போட்டியில் இறங்கியிருப்பது எதிர்க்கட்சிகளின் கோபத்தைத் தூண்டியுள்ளது.

