அழகு நிலையம் ஒன்றில் எடுத்துக்கொண்ட முன்கட்டணச் சிகிச்சை பிடிக்காததால், அதனை ‘மோசடி’ நிறுவனம் என்று இன்ஸ்டகிராமில் குறிப்பிட்ட உள்ளடக்கப் படைப்பாளர் இழப்பீடாக $15,000 செலுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
அந்த வாடிக்கையாளருக்கு அழகு நிலையத்தின் நடவடிக்கைகள்மீது உண்மையான சந்தேகங்கள் இருந்தபோதிலும் அது வாடிக்கையாளர்களை ஏமாற்றுவதற்காகவே தொடங்கப்பட்ட ஒழுக்கமற்ற நிறுவனம் என்பதை அவர் நிரூபிக்கவில்லை என்று மாவட்ட நீதிபதி சிம் மே லிங் தீர்ப்பளித்தார்.
இருப்பினும், விற்பனை இழப்புக்காகக் கோரப்பட்ட கூடுதல் இழப்பீட்டை வழங்க நீதிபதி மறுத்துவிட்டார்.
அந்தப் பெண் மீண்டும் இதுபோன்ற குற்றச்சாட்டுகளைத் தெரிவிக்க தடை விதிக்கக் கோரும் இடைக்காலத் தடையாணை பிறப்பிக்கவும் நீதிபதி அனுமதிக்கவில்லை.
அந்த அழகு நிலையம் பொது இழப்பீடாக 50,000 வெள்ளியையும், அதனுடன் கூடுதல் இழப்பீடுகள் மற்றும் வணிக இழப்பிற்கான ஈட்டுத்தொகையையும் கோரியிருந்தது.
இன்ஸ்டகிராமில் @விவியன்மோக்_ என்ற பெயரில் இயங்கும் மோக் வாய் குவான் என்பவர், ஃபார் ஈஸ்ட் கடைத்தொகுதியில் உள்ள ‘பியூட்டி இன்ஸ்டிங்க்ட்’ என்ற அழகு நிலையத்தின் வாடிக்கையாளராக 2020 முதல் 2025 தொடக்கம்வரை இருந்தார் என்று நீதிமன்ற விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
அவர் 2020 ஜனவரியில் அந்த அழகு நிலையத்தின் இணையத்தளம் வழியாக $488 மதிப்பிலான ஆறு அமர்வுகள் கொண்ட ‘சில்க் பீல்’ முக அழகுச் சிகிச்சைத் தொகுப்பை வாங்கினார்.
ஆனால், அவரது சருமம் மிகவும் உணர்திறன் வாய்ந்தது என்பதால் இந்தச் சிகிச்சைக்கு ஏற்றதன்று என்றும் அவருக்கு வேறு சிகிச்சை தேவை என்றும் அழகு நிலையத்தின் இயக்குநர் சியாங் நோரிட்டா கூறியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
அதனால், தான் ஓர் உறுப்பினர் திட்டத்தில் சேருமாறு வற்புறுத்தப்பட்டதை உணர்ந்ததாக மோக் கூறினார்.
இறுதியாக, அவர் $1,000 மதிப்பிலான பயிற்சி உறுப்பினர் திட்டத்தை வாங்கினார். அதன்மூலம் அவருக்கு 1,000 சிகிச்சைச் சலுகைப்புள்ளிகளும் தள்ளுபடி விலையில் சிகிச்சைகளைப் பெறும் வாய்ப்பும் கிடைத்தன.
ஆனால், அந்த நிலையம் சிகிச்சைக்குரிய முழுக் கட்டணத்தையும் மோக்கிடம் வசூலித்தது; உறுப்பினர்களுக்கான தள்ளுபடி விலையை வழங்கவில்லை. ஏனெனில், அந்தச் சிகிச்சைக்கு முழுமையாகப் பணம் செலுத்த அவரிடம் இருந்த சலுகைப்புள்ளிகள் போதுமானதாக இல்லை.
