சிங்கப்பூரின் பெரும் சொத்துரிமையாளர்களான தந்தை, மகனான திரு ராஜ் குமார், திரு கிஷின் ஆர்.கே. இருவரும் அபுதாபியில் குடும்ப அலுவலகத்தை அமைக்கவுள்ளனர்.
‘ஆர்பி’ குடும்ப அலுவலகம் என்ற அந்த நிறுவனம் ஐக்கிய அரபு சிற்றரசுகள் தலைநகர் அல் மரியா தீவில் அமையும் என்று ப்ளூம்பெர்க் செய்திக்கு அளித்த நேர்காணலில் திரு கிஷின் கூறினார்.
அபுதாபி கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்துள்ளது. உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட சட்ட கட்டமைப்பைக் கொண்டுள்ளது என்பதால் அங்கு அலுவலகத்தை அமைப்பதாக திரு கிஷின் கூறினார்.
ஏறக்குறைய 3.15 பில்லியன் அமெரிக்க டாலர் (4.22 பி. சிங்கப்பூர் வெள்ளி) நிகர மதிப்பு என மதிப்பிடப்பட்டுள்ள அக்குடும்பத்தின் சொத்தை நிர்வகிக்கும் முதல் அலுவலகம் அது. எனினும் அது எவ்வளவு பணத்தை நிர்வகிக்கும் என்று திரு கிஷின் கூற மறுத்துவிட்டார்.
நிறுவனம் ஒரு குழுவை வேலைக்கு அமர்த்தும் பணியில் ஈடுபட்டுள்ளது என்றும் சில்லறை விற்பனை, வர்த்தகம், விருந்தோம்பல் துறைகளில் சொத்துச் சந்தை முதலீடுகளை முதன்மையாக கவனம் செலுத்தும் என்றும் அவர் கூறினார்.
அண்மைய ஆண்டுகளில் செல்வந்தர்கள் நாடும் மையமாக அபுதாபி உருவெடுத்துள்ளது.
‘ஹெட்ஜ் நிதி’ கோடீஸ்வரர் ரே டாலியோ, அப்போலோ குளோபல் மனேஜ்மென்ட் நிர்வாகத்தின் இணை நிறுவனர் திரு லியோன் பிளாக் போன்றவர்கள் ஏற்கெனவே எமிரேட்ஸில் குடும்ப அலுவலகக் கிளைகளை அமைத்துள்ளனர்.
எகிப்திய கோடீஸ்வரர் நசெப் சாவிரிஸும் தனது குடும்ப முதலீட்டு நிறுவனத்தை அபுதாபி அனைத்துலகச் சந்தை நகருக்கு மாற்றத் திட்டமிட்டுள்ளதாகக் கூறியுள்ளார். ரஷ்ய எஃகு வர்த்தகர் விளாடிமிர் லிசின், இந்தியாவின் அதானி குடும்பத்தினர் ஆகியோர் அங்கு பதிவு செய்துள்ள அலுவலகங்களைக் கொண்டுள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
அபுதாபி, மத்திய கிழக்கு நாடுகளின் பெரும் பணத்தை அணுக வசதியாக இருப்பதுடன், கட்டுப்பாடுகள் குறைவாக இருப்பதும் ஈர்ப்பின் ஒரு பகுதியாகும்.
அபுதாபியில், குடும்ப அலுவலகம் அமைக்க குடும்ப உறுப்பினர் ஒருவர் உரிமையாளராக இருந்தால் போதும் (குறைந்தபட்சம் துபாயில் இருவர்). பதிவுக் கட்டணம் 500 அமெரிக்க டாலர். மாறாக, பெரும் பண மோசடி ஊழலைத் தொடர்ந்து சிங்கப்பூர் குடும்ப அலுவலகங்கள் மீதான கண்காணிப்பை அதிகரித்துள்ளதால் குறைந்தபட்ச முதலீடும் அதிக வெளிப்படைத்தன்மையும் இங்கு தேவைப்படுகிறது.
திரு குமார், திரு கிஷினின் நடவடிக்கை “முன்னணி நிதி மையமாக அபுதாபி மீது உலகளாவிய நம்பிக்கை அதிகரித்து வருவதைக் காட்டுகிறது” என்று அபுதாபி அனைத்துலகச் சந்தை நிறுவனத்தின் தலைமைச் சந்தை மேம்பாட்டு அதிகாரி திரு அரவிந்த் ராமமூர்த்தி குறிப்பிட்டார்.