சமூக நடவடிக்கைகளில் பங்கேற்க மூத்தோருக்கு உதவும் புதிய செயலி

2 mins read
67a86863-4676-4a22-99df-c61ea0c3112d
பார்வைக் குறைபாடு, நினைவாற்றல் குறைபாடு போன்ற பிரச்சினைகள் கொண்ட மூத்தோர் பயன்படுத்தும் வகையில் ‘அவர் கம்போங்’ செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. - படம்: சாவ்பாவ்

சமூகமாக உடற்பயிற்சி செய்வது, ஒன்றிணைந்து உணவருந்துவது உள்ளிட்ட சமூக நடவடிக்கைகளில் மூத்தோர் ஈடுபடுவதற்கு வசதியாக ‘அவர் கம்போங்’ எனும் புதிய செயலி வியாழக்கிழமையன்று (டிசம்பர் 12) அறிமுகப்படுத்தப்பட்டது.

சமூக நடவடிக்கைகளுக்குப் பதிவு செய்வதைத் தவிர, பயனர்கள் தங்கள் ஆரோக்கியத்தைக் கண்காணிக்கவும் தொண்டூழியம் செய்யப் பதிவுசெய்யவும் இச்செயலியைப் பயன்படுத்தலாம்.

பார்வைக் குறைபாடு, நினைவாற்றல் குறைபாடு போன்ற பிரச்சினைகள் கொண்ட மூத்தோர் பயன்படுத்தும் வகையில் அச்செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.

அவர்களைக் கருத்தில் கொண்டு உள்ளுணர்வு மூலம் தொடுதிரையைப் பயன்படுத்துவது, ஒலிவழிச் செய்தி அனுப்புவது, பெரிய எழுத்துரு அளவுகள் போன்ற வசதிகள் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

‘அவர் கம்போங்’ செயலி வெளியீட்டு நிகழ்ச்சியில் கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் எரிக் சுவா கலந்துகொண்டார்.

“80 ஆண்டுகளுக்கும் மேலான நீண்ட ஆயுட்காலத்திற்கும் ஆரோக்கியமான வாழ்விற்கும் இடையே உள்ள இடைவெளியைப் போக்க சிங்கப்பூர் போராடி வருகிறது. தங்கள் வாழ்நாளில் 10 ஆண்டுக்கும் குறைவான காலமே மக்கள் நல்ல உடல்நலத்துடன் உள்ளனர்,” எனத் தொடக்க நிகழ்ச்சியில் பேசிய திரு எரிக் சுவா கூறினார்.

“மூத்தோர் சமூகத்துடன் ஒன்றிணைந்து இருக்க இச்செயலி உதவியாக இருக்கும். மேலும், சமூக நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபடுவது மூலம் அவர்கள் நீண்டகாலம் நல்ல உடல்நலத்துடன் வாழமுடியும்,” என்றார் அவர்.

‘லயன்ஸ் பிஃபிரெண்டர்ஸ்’ (Lions Befrienders) தொண்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கரேன் வீ கூறுகையில், இந்த செயலியானது 2021ஆம் ஆண்டு அந்நிறுவனத்தால் தொடங்கப்பட்ட ‘i-ok@LB’ திட்டத்தின் விரிவாக்கம் என்றார்.

“இச்செயலியில், மூத்தோரின் உடல்நலன் குறித்து அவர்கள் தொண்டூழியர்களுக்குத் தெரிவிக்க அவர்களுக்கு வழங்கப்பட்ட ‘டெப்லெட்’ எனும் மின்னிலக்க கருவியில் இருக்கும் பொத்தானை அழுத்தினால் போதுமானது. அந்தப் பொத்தானை அழுத்தாத மூத்தோரை தொண்டூழியர்கள் உடனே அணுகி, அவர்களின் உடல்நலம் குறித்து விசாரிப்பர்,” என திரு கரேன் வீ செயலி குறித்து விளக்கினார்.

அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் அனைத்து ‘லயன்ஸ் பிஃபிரெண்டர்ஸ்’ நிலையத்திலிருக்கும் 10,000 மூத்தோர்களுக்கு ‘அவர் கம்போங்’ செயலியை அதன் முழுத் தொகுப்பு சேவைகளுடன் வெளியிடுவதே இதன் நோக்கம். இந்த இலவச செயலியானது சிங்கப்பூரின் நான்கு அதிகாரபூர்வ மொழிகளிலும் கிடைக்கிறது.

குறிப்புச் சொற்கள்