சீனப் புத்தாண்டு விடுமுறைக் காலமான ஜனவரி 28 முதல் 30 வரை மொத்தம் 1,115 தனியார் மருந்தகங்கள் பல்வேறு நேரங்களில் திறந்திருக்கும்.
விழாக் காலத்தில் மருத்துவப் பராமரிப்புத் தேவைப்படுவோர் தங்கள் முகவரி அல்லது அஞ்சல் குறியீட்டைப் பயன்படுத்தி அருகிலுள்ள மருந்தகங்களையும் அவை செயல்படும் நேரத்தையும் GPGoWhere என்ற இணையத்தளத்தில் தேடலாம் என்று சுகாதார அமைச்சு திங்கட்கிழமை (ஜனவரி 27) தெரிவித்தது.
சாதாரண உடல்நலக் குறைபாடுகள் உள்ளவர்கள் தனியார் மருத்துவர் அல்லது 24 மணி நேர மருந்தகத்தை நாட ஊக்குவிக்கப்படுகின்றனர். மருந்தகத்திற்குச் செல்வதற்கு முன், முன்பதிவு செய்ய அல்லது மருந்தகத்தை அழைக்குமாறு அமைச்சு அறிவுறுத்தியது.
சிறிய வெட்டு, தொடர் வாந்தி அல்லது எக்ஸ்ரே தேவைப்படக்கூடும் எனக் கருதும் சுளுக்கு போன்ற அவசர ஆனால் உயிர் ஆபத்தற்ற பிரச்சினைகளுக்கு மூன்று அவசரப் பராமரிப்பு மையங்களை (யுசிசி) நாடலாம்.
அலெக்சாண்ட்ரா மருத்துவமனை யுசிசி: 24 மணி நேரம் திறந்திருக்கும்
யுசிசி @ அட்மிரால்டி: காலை 8 மணி முதல் இரவு 11 மணி வரை திறந்திருக்கும்
தேசிய பல்கலைக்கழக மருத்துவமனை குழந்தைகள் யூசிசி@புக்கிட் பாஞ்சாங்: காலை 9 மணி முதல் இரவு 11 மணி வரை திறந்திருக்கும்
நெஞ்சு வலி, மூச்சுத்திணறல் அல்லது கட்டுப்படுத்த முடியாத ரத்தப்போக்கு போன்ற கடுமையான அல்லது உயிராபத்துள்ள அவசரநிலைகளுக்கு மட்டுமே மருத்துவமனைகளின் விபத்து அவசரநிலைப் பிரிவுகளுக்கு செல்ல வேண்டும் என்று அமைச்சு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டது.
தொடர்புடைய செய்திகள்
உயிருக்கு ஆபத்தற்ற அவசரநிலையில் இருப்பவர் 995 என்ற எண்ணை அழைப்பதைத் தவிர்க்க வேண்டும். இதன்மூலம் உயிராபத்துள்ள அவசர சிகிச்சை தேவைப்படுவோருக்கு விரைந்து சிகிச்சை அளிக்க முடியும்.

