ஜாலான் புசாரில் அடுத்த ஐந்தாண்டுகளுக்காக 100க்கும் மேற்பட்ட மேம்பாட்டுத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஜாலான் புசார் நகர மன்றத்துக்கான ஐந்தாண்டுப் பெருந்திட்டத்தை ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 6) அறிவித்த தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் டியோ, அந்த மேம்பாட்டுத் திட்டங்களில் நீடித்த நிலைத்தன்மை முக்கிய அம்சமாக இருக்கும் என்றார்.
அதன் ஓர் அங்கமாக ஜாலான் புசாரில் அறிவார்ந்த ‘எல்இடி’ விளக்குகள் பொருத்தப்படவுள்ளன. அங்கு கூடுதல் மரங்களும் செடிகளும் நடப்படுவதோடு புதிய பசுமையிடங்களும் அமைக்கப்படும்.
மேம்படுத்தப்பட்ட அக்கம்பக்கப் பூங்காக்கள், சிறுவர்களுக்கான விளையாட்டு இடங்கள், பெரியவர்களுக்கும் முதியவர்களுக்குமான உடற்பயிற்சிக் கூடங்கள், ‘நட்பார்ந்த’ சாலைகள் முதலிய வசதிகளைக் குடியிருப்பாளர்கள் எதிர்பார்க்கலாம்.
கூடுதலான கூரைவேய்ந்த நடைபாதைகளும் அமைக்கப்படும். பொது, தனியார் குடியிருப்புப் பேட்டைகள் இரண்டிலும் புதிய வசதிகள் அமைக்கப்படும்.
நடமாட சிரமப்படுவோருக்கும் நினைவாற்றல் குன்றியோருக்கும் ஆதரவு வழங்க சாய்தளங்கள், வழிகளைக் காட்டும் வண்ணக் குறியீடுகள் போன்ற வசதிகள் திட்டத்தில் உண்டு.
இந்தப் பெருந்திட்டத்தை உருவாக்க 3,000க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்களிடம் கருத்துகள் திரட்டப்பட்டன. அதன் அடிப்படையில், இந்தப் பெருந்திட்டம் மூன்று முக்கிய அம்சங்களை மையமாகக் கொண்டுள்ளது.
முதலாவது, நீடித்த நிலைத்தன்மையுடைய நகரை உருவாக்குவது. அடுத்து, பரிவுமிக்க சமூகத்தை வளர்ப்பது. இறுதியாக, தலைமுறைகளுக்கு இடையிலான பிணைப்பை வலுப்படுத்துவது.
தொடர்புடைய செய்திகள்
மக்கள் செயல் கட்சியின் பசுமை நகரங்களுக்கான செயல்திட்டத்தின் ஒருங்கிணைப்பு நகர மன்றமான ஜாலான் புசார், சிங்கப்பூர் பசுமைத் திட்டம் 2030ஐ முன்னெடுப்பதில் முன்னிலை வகிக்கிறது.
அண்மையில் ஜூரோங் - கிளமெண்டி நகர மன்றத்தின் ஐந்தாண்டு பெருந்திட்டக் கண்காட்சியில் காணப்பட்ட மக்கள் செயல் கட்சியின் புதுமுகமான திரு டேவிட் ஹோ, ஜாலான் புசார் ஐந்தாண்டுத் திட்ட அறிமுக நிகழ்ச்சியிலும் காணப்பட்டார்.
நிதி அமைச்சின் முன்னாள் பாதுகாப்பு, மீள்திறன் திட்ட இயக்குநர் ஷான் லோவையும் ஜாலான் புசார் நகர மன்றத்தின் புதிய மக்கள் செயல் கட்சி தன்னார்வலராக அமைச்சர் டியோ அறிமுகப்படுத்தினார்.
பொது, தனியார் துறைகளில் நீண்டகால அனுபவமுடைய திரு லோ, தமது அனுபவத்தைக் குழுவிடம் பகிர்ந்துகொள்வார் என்று அமைச்சர் டியோ நம்பிக்கை தெரிவித்தார்.
ஜாலான் புசார் குடியிருப்பாளர்களுடன் பேசிய திரு லோ, அவர்களுக்கு சேவை செய்ய ஆவலோடு இருப்பதாகக் கூறினார்.