கடல்துறை ஆய்வில் $100 மில்லியனுக்கும் மேல் முதலீடு: ஜெஃப்ரி சியாவ்

கடல்துறை ஆய்வில் $100 மில்லியனுக்கும் மேல் முதலீடு: ஜெஃப்ரி சியாவ்

2 mins read
b676102c-7100-4135-b2f7-8c7ed7aab7e7
சிங்கப்பூர்க் கடல்துறை வாரத்தின் தொடக்க நிகழ்வில் தற்காலிகப் போக்குவரத்து அமைச்சர் ஜெஃப்ரி சியாவ் உரையாற்றினார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கடல்துறையில் ஆய்வு, வளர்ச்சிப் பணிகளுக்காக அடுத்த ஐந்து ஆண்டுகளில் $100 மில்லியனுக்கும் மேல் முதலீடு செய்யப்படும் என்று தற்காலிகப் போக்குவரத்து அமைச்சர் ஜெஃப்ரி சியாவ் தெரிவித்துள்ளார். புதிய நகல் வரைவின்கீழ் நிதி ஒதுக்கப்படும் என்றார் அவர்.

சிங்கப்பூர்க் கடல்துறை வாரத்தின் தொடக்க நிகழ்வில் திரு சியாவ் அதனை அறிவித்தார்.

ஆக அண்மை சிங்கப்பூர்க் கடல்துறைத் தொழில்நுட்ப, ஆய்வு உத்தேசத் திட்டம் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் புத்தாக்க நடவடிக்கைகளுக்கு வழிகாட்டியாகத் திகழும் என்று அவர் சொன்னார். தானியக்கக் கடல்துறைச் செயல்முறைகள், மாற்று எரிபொருள்கள், விவேகத்துடன் இயங்கக்கூடிய கப்பல்கள் முதலியவை அவற்றுள் அடங்கும்.

ஆண்டுதோறும் நடைபெறும் சிங்கப்பூர்க் கடல்துறை வாரம், இம்முறை திங்கட்கிழமை (ஏப்ரல் 20) தொடங்கி, வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 24) வரை நீடிக்கிறது. அதன் தொடர்பிலான நிகழ்ச்சிகள் சன்டெக் மாநாட்டு, கண்காட்சி நிலையத்தில் நடைபெறுகின்றன. உலகெங்கும் உள்ள ஏறக்குறைய 80 நாடுகள், வட்டாரங்களிலிருந்து 20,000க்கும் மேற்பட்டோர் அதில் பங்கெடுக்கின்றனர்.

புதிய உத்தேசத் திட்டம், ஆய்வுகளை நடைமுறைத் தீர்வுகளாக மாற்றுவதில் கவனம் செலுத்தும். சிங்கப்பூர்க் கடல்துறை, துறைமுக ஆணையம் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 21) வெளியிட்ட அறிக்கையில் அந்தத் தகவல் இடம்பெற்றுள்ளது. உத்தேசத் திட்டம் மூன்று அம்சங்களுக்கு முன்னுரிமை அளிக்கும். அவையாவன:

* மின்னிலக்கத் தொழில்நுட்பத்தை அடுத்த நிலைக்குக் கொண்டுசெல்லுதல்

* கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைக்கும் முறைகளுக்கு ஆதரவளித்தல்

* கப்பல் போக்குவரத்து நடவடிக்கைகளுக்கு இடையில் ஒருங்கிணைப்பை மேம்படுத்துதல்.

ஊழியர் தேவை, நிலத்திலும் கடற்புறத்திலும் இடப்பற்றாக்குறை முதலிய அம்சங்களையும் வரைவுத் திட்டம் கவனத்தில் எடுத்துக்கொள்ளும் என்றும் ஆணையம் குறிப்பிட்டது.

தொழில்துறையினருடனும் ஆய்வாளர்களுடனும் கலந்தாலோசித்த பிறகு உத்தேசத் திட்டம் வரையப்பட்டது.

கடந்த இருபது ஆண்டுகளில் கடல்துறை ஆய்வு, மேம்பாட்டுப் பணிகளுக்காக ஏற்கெனவே $500 மில்லியனுக்கும் மேல் செலவிடப்பட்டுள்ளது; அதனுடன் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள $100 மில்லியனுக்கும் அதிகமான நிதியும் சேரும் என்று ஆணையம் தெரிவித்தது.

ஓ‌ஷன்ஸ்-எக்ஸ் எனும் ஆணையத்தின் புதிய தளமொன்று உருவாக்கப்பட்டிருப்பதையும் திரு சியாவ் அறிவித்தார். கட்டுப்பாட்டு அமைப்புகள், துறைமுக நிறுவனங்கள், கப்பல் நிறுவனங்கள், மற்ற அனைத்துலகப் பங்காளித்துவ நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு இடையே தகவல்களைப் பரிமாறிக்கொள்ள அது உதவும் என்றார் அவர்.

அந்தத் தளம் பல்வேறு கடல்துறைக் கட்டமைப்புகள் இணைந்து செயல்பட அனுமதிக்கும்; பயனீட்டாளர்களை மின்னிலக்கச் சேவைகளுடனும் தரவுகளுடனும் அது நேரடியாக இணைக்கும் என்றும் அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்