சமூக உண்டியலும் மரினா பே சேண்ட்சும் (எம்பிஎஸ்) இணைந்து நடத்திய வெர்ட்டிக்கல் மராத்தான் (மேல்நோக்கி ஓடும்) நடைப் பயணத்தில் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
மரினா பே சேண்ட்சின் அழகிய காட்சியைக் கண்டு ரசிக்கும் வகையில் இந்த நடை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மின்தூக்கி வசதியைப் பயன்படுத்தாமல் 57 மாடிப் படிகளை ஏறி அவர்கள் விரைந்தனர்.
இந்த மராத்தான் நடையிலும் பின்னர் அன்று மாலை நடைபெற்ற சமூக உண்டியலின் ஹார்ட்ஸ்ட்ரிங்ஸ் நடையிலும் $5.2 மில்லியனுக்கும் அதிகமான தொகை அறப்பணிக்காகத் திரட்டப்பட்டது.
உடற்குறையுள்ள பெரியோர், சிறப்புத் தேவைகளைக் கொண்ட குழந்தைகள், ஆபத்தான சூழலில் உள்ள இளையர்கள், உதவி தேவைப்படும் குடும்பங்கள், மனநலத் தேவைகள் உள்ளவர்கள் மற்றும் ஆதரவு தேவைப்படும் முதியோர்கள் போன்ற பிரிவினரை இலக்காகக் கொண்டு செயல்படுத்தப்படும் 300 திட்டங்களால் பயனடையும் 94,000க்கும் மேற்பட்டோருக்கு இத்தொகை பயன்படுத்தப்படும்.
தனியார் துறை, அரசு அமைப்புகள், சமூக சேவை அமைப்புகள், தனிநபர்கள் என 47 குழுக்களைக் கொண்ட பங்கேற்பாளர்கள் ஆகஸ்ட் 29ஆம் தேதி காலை 57 மாடிகளை நோக்கிய பயணத்தில் பங்கேற்றனர். சமுதாய, குடும்ப மேம்பாட்டு மற்றும் சட்ட அமைச்சின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் எரிக் சுவா கொடியசைத்து அந்த நடைப்பயணத்தைத் தொடங்கி வைத்தார்.
இறுதிக் கோட்டை எட்டிய பிறகு பங்கேற்பாளர்கள் காலை நேர நகரின் அழகிய காட்சிகளைக் கண்டு ரசித்தனர்.
சிங்கப்பூர் காவல் துறையைச் சேர்ந்த ‘கிளைம்ப் வேரியர்ஸ்’ குழு, மொத்தமாக 29 நிமிடங்கள் 59 வினாடிகளில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது.
இக்குழுவைச் சேர்ந்த சுபாஸ் குருங், 57 மாடிகளை ஐந்து நிமிடங்கள் 55 வினாடிகளில் ஏறி சிறந்த ஆண் பங்கேற்பாளராக பெயர் பெற்றார்.
சிங்கப்பூர் டவர்ரன்னிங் சங்கத்தைச் சேர்ந்த செரின் சியோங், எட்டு நிமிடங்கள் 18 வினாடிகளில் இலக்கைக் கடந்து சிறந்த பெண் பங்கேற்பாளராக வெற்றி பெற்றார்.
68 வயதான போதகரான ஆண்ட்ரூ கூ, ‘டிரம்போலைன் குதித்தல்’, எடைத் தூக்கும் பயிற்சிகள் அடங்கிய தனது தினசரி உடற்பயிற்சி முறை, மராத்தான் ஓடிய அனுபவம் காரணமாக படிகளில் ஏறுவதை எளிதாகச் செய்து முடித்தார்.
‘நியூ ஹோப் கம்யூனிட்டி சர்வீசஸ்’ அமைப்பின் நிறுவனரும் மூத்த ஆலோசகருமான கூ, இந்நிகழ்வு மிகவும் அர்த்தமுள்ளதாக இருந்தது என்றும் 2027ல் மீண்டும் இதில் பங்கேற்க விரும்புவதாகவும் தெரிவித்தார்.
மாலை வேளை சூழலில் சமூக உண்டியல் ஹார்ட்ஸ்ட்ரிங்ஸ் நடையின்போது ஏறக்குறைய 3,700 பேர் மெரினா பே பகுதியைச் சுற்றி நிதானமாக நடந்து மகிழ்ந்தனர்.
2026ஆம் ஆண்டின் இந்த நடை, சமூக உண்டியல், எம்பிஎஸ் இடையிலான 15 ஆண்டுகால கூட்டு நடவடிக்கையை குறிக்கிறது. இந்நிகழ்வில் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லியும் கலந்துகொண்டார்.


