1,394 பேரிடம் விசாரணை

2 mins read
சட்ட அமலாக்க அமைப்புகள் மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகள்
5229447e-e3ff-470a-a177-14865e9b912c
சட்ட அமலாக்க அமைப்புகள் லிட்டில் இந்தியா, போட் கீ, கேலாங், சைனாடவுன் போன்ற இடங்களைக் குறிவைத்தன. - படம்: சிங்கப்பூர் காவல்துறை

ஆண்டிறுதி கொண்டாட்டங்களை முன்னிட்டு, சட்ட அமலாக்க அமைப்புகள் தீவுமுழுதும் ஒரு மாதம் மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளுக்குப் பிறகு, குற்ற நடவடிக்கைகளுக்காக மொத்தம் 1,394 பேர் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

15 வயதுக்கும் 77 வயதுக்கும் இடைப்பட்ட 885 ஆண்களும் 509 பெண்களும் வெவ்வேறு குற்றங்களுக்காக விசாரிக்கப்படுகின்றனர்.

உடற்பிடிப்புக் கடைகளில் பாலியல் சேவைகள் வழங்குவது, போதைப்பொருள் நடவடிக்கைகள், சட்டவிரோதச் சூதாட்டம், சட்டவிரோத பாலியல் மருந்து விற்பனை ஆகியவை அவற்றில் அடங்கும்.

லிட்டில் இந்தியா, போட் கீ, கேலாங், சைனாடவுன் போன்ற இடங்களைக் குறிவைத்து, காவல்துறையினர் 6,700க்கும் மேற்பட்டோரைச் சோதித்தனர். நவம்பர் 15க்கும் டிசம்பர் 18க்கும் இடையே நடத்தப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கைகளில், 523 பேர் கைது செய்யப்பட்டனர்.

630க்கும் மேற்பட்ட திடீர் சோதனை நடவடிக்கைகளில், 1,900க்கும் அதிகமான அதிகாரிகள் ஈடுபட்டதாகக் காவல்துறையினர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தனர்.

மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு, சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை, சுகாதார அறிவியில் ஆணையம், குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம், சிங்கப்பூர் சுங்கத்துறை, நிலப் போக்குவரத்து ஆணையம், மனிதவள அமைச்சு, வீடமைப்பு வளர்ச்சிக் கழகம், சிங்கப்பூர் உணவு அமைப்பு ஆகியவையும் அந்தக் கூட்டு முயற்சியில் ஈடுபட்டன.

நவம்பர் 20க்கும் நவம்பர் 25க்கும் இடையே, லிட்டில் இந்தியா, போட் கீ, புகிஸ், சைனாடவுன் ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கைகளில் மொத்தம் 146 பெண்களும் 36 ஆண்களும் கைதுசெய்யப்பட்டதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

டிசம்பர் 5ஆம் தேதி சுங்கை காடுட் தொழில்பேட்டையில் உள்ள காலி கட்டடங்களில் மற்றொரு சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அங்கு கட்டுப்படுத்தப்பட்ட போதைமருந்துகளும் கத்திகளும் கண்டுபிடிக்கப்பட்டன.

துவாசில், வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையில், 531 கள்ள சிகரெட்டுகள், இரண்டு மின் சிக்ரெட்டுகள், புகையிலை பேக்கெட் ஆகியவை கைப்பற்றப்பட்டதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

நான்கு வாரச் சோதனை நடவடிக்கைகள், குற்றச்செயல்களையும் சட்டவிரோத நடவடிக்கைகளையும் தடுக்க காவல்துறையினர் மேற்கொள்ளும் முயற்சிகளின் ஒரு பகுதி என்று மூத்த உதவி ஆணையர் கிரகரி டான் கூறினார்.

குறிப்புச் சொற்கள்