முன்னாள் முதலாளியிடம் $2 மில்லியனுக்கும் அதிகமான தொகையை ஏமாற்றி இழப்பை ஏற்படுத்திய குற்றத்துக்காக, 56 வயது ஆடவர் மீது மோசடி, கள்ளப்பணத்தை நல்ல பணமாக்குதல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட உள்ளன.
நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் ஒருவர் கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளாக மோசடியில் ஈடுபட்டதாகக் கூறி, 2025ஆம் ஆண்டு ஜூலை மாதம் 16ஆம் தேதியன்று புகார் ஒன்று பெறப்பட்டதாக ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 25) காவல்துறை வெளியிட்ட செய்தி அறிக்கையில் தெரிவித்தது.
அந்த நபர் தமது நிறுவனத்தில் தளவாட மேலாளராகப் பணியாற்றிய நிலையைத் தவறாகப் பயன்படுத்தி, அவரது மனைவிக்குத் தெரியாமலேயே அவர் பெயரில் தனி உரிமையாளர் வர்த்தகத்தைப் பதிவு செய்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
பின்னர், நிறுவனத்துக்கு வழங்கப்படாத தளவாடச் சேவைகளுக்காக அவர் 128 போலி விலைப்பட்டியல்களைச் சமர்ப்பித்தார். இதனால் அந்நிறுவனத்திற்கு $2 மில்லியனுக்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டது.
மேற்கொண்டு நடத்தப்பட்ட புலன்விசாரணையில், அக்குற்றச்செயலின் மூலம் பெறப்பட்ட வருவாயைத் தனது சொந்த முதலீடுகளுக்கும் தனிப்பட்ட செலவினங்களுக்கும் அவர் பயன்படுத்தியது கண்டறியப்பட்டது.
கணினியைத் தவறான காரியங்களுக்குப் பயன்படுத்துவது தொடர்பான சட்டத்தின்கீழ் கணினித் தகவல்களை அனுமதியின்றி அணுகியதற்காக ஒரு குற்றச்சாட்டும் தண்டனைச் சட்டத் தொகுப்பின்கீழ் ஆறு மோசடிக் குற்றச்சாட்டுகளும் ஊழல், போதைப்பொருள் கடத்தல் மற்றும் பிற கடுமையான குற்றங்கள் (பலன்களைப் பறிமுதல் செய்தல்) சட்டத்தின்கீழ் கள்ளப்பணத்தை நல்ல பணமாக்குதல் தொடர்பாக ஆறு குற்றச்சாட்டுகளும் திங்கட்கிழமையன்று (அக்டோபர் 26) நீதிமன்றத்தில் அவர் மீது சுமத்தப்பட உள்ளன.
கணினித் தகவல்களை அனுமதியின்றி அணுகிய குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அவருக்கு அதிகபட்சமாக $50,000 வரை அபராதம், ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
மோசடிக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அவருக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
அத்துடன், கள்ளப்பணத்தை நல்ல பணமாக்கிய குற்றம் நிரூபிக்கப்படும் நபர்களுக்கு $500,000 வரை அபராதம், 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
