தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

$200,000 மதிக்கத்தக்க மின்சிகரெட்டுகள் பறிமுதல்

2 mins read
69188ae4-c689-4933-93f0-1dfa0564a8ad
சுங்கை காடுட்டில் உள்ள சரக்குக் கிடங்கு ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்ட மின்சிகரெட்டுகள் தொடர்பாக ஆணையம் பிப்ரவரி 28ல் விசாரணை நடத்தியது. - படம்: சுகாதார அறிவியல் ஆணையம்

சுகாதார அறிவியல் ஆணையத்தைச் சேர்ந்த அதிகாரிகள் பல மின்சிகரெட்டுகளைப் பறிமுதல் செய்துள்ளனர்.

அவற்றின் மொத்த மதிப்பு $200,000க்கும் அதிகம்.

அந்த மின்சிகரெட்டுகள் விற்பனைக்காக சிங்கப்பூருக்குள் கொண்டு வரப்பட்டன.

இதுதொடர்பான இரு வெவ்வேறு வழக்குகள் பதிவாகின.

மொத்தமாக ஏறத்தாழ 10,000 மின்சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

மின்சிகரெட்டுகள் சிங்கப்பூரில் சட்டவிரோதமானவை.

அவற்றையும் அவை சார்ந்த கருவிகளையும் பயன்படுத்துவது, வைத்திருப்பது, வாங்குவது 2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திலிருந்து தடை செய்யப்பட்டுள்ளது.

சுங்கை காடுட்டில் உள்ள சரக்குக் கிடங்கு ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்ட மின்சிகரெட்டுகள் தொடர்பாக ஆணையம் பிப்ரவரி 28ல் விசாரணை நடத்தியது.

25 அட்டைப் பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்த ஏறத்தாழ 5,000 மின்சிகரெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

அவற்றின் மொத்த மதிப்பு ஏறத்தாழ $110,000.

அதே நாளன்று, இரு ஆடவர்களை ஆணையம் கைது செய்தது.

அவர்களுக்கு 32 மற்றும் 31 வயது.

இருவரும் சரக்குக் கிடங்கில் இருந்த மின்சிகரெட்டுகளைப் பெற்றுக்கொள்ள அங்கு சென்றதாகத் தெரிவிக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட அந்த இரு ஆடவர்களும் விசாரணையில் உதவி வருகின்றனர்.

மார்ச் 1ல், 4,800 மின்சிகரெட்டுகளை துவாஸ் சோதனைச்சாவடியில் உள்ள குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணைய அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

மின்சிகரெட்டுகள் லாரி ஒன்றில் இருந்த சரக்குகளுடன் மறைத்துவைக்கப்பட்டிருந்தன.

அவற்றின் தோராய மதிப்பு $105,000.

இந்த வழக்கு சுகாதார அறிவியல் ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

24 வயது லாரி ஓட்டுநர் விசாரணையில் உதவி வருகிறார்.

மின்சிகரெட்டுகளையும் அவை சார்ந்த கருவிகளையும் சிங்கப்பூருக்குள் இறக்குமதி செய்வது, விநியோகம் செய்வது, விற்பனை செய்வது ஆகியவை குற்றமாகும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இக்குற்றத்தை முதல்முறை புரிபவர்களுக்கு $10,000 வரை அபராதம், ஆறு மாதங்கள் வரை சிறை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

மின்சிகரெட்டுகள் தொடர்பான குற்றத்தைத் தொடர்ந்து புரிபவர்களுக்கு $20,000 வரை அபராதம், 12 மாதங்கள் வரை சிறை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்